Monday, 11 November 2013

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
புன்னகைப்பதில்லை.. 
அல்லது அது 
புன்னகையைப் போலிருப்பதில்லை..!

உடலினும் பெரிதான கோணிப்பை
சுமக்கும் அவர்களிடம்
ஒளிந்திருக்கிறது..!
கோணிப்பையினும் பெரிதான துயரம்..!

பரந்துப்பட்ட குப்பைவெளியில்
கிழிந்த வரைபடங்களையும்
சிதைந்த தெய்வச்சித்திரங்களையும்
கால்களால் விலக்கி
தமக்கான தேசத்தை கண்டெடுக்கிறார்கள்..!

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
குப்பை மேடுகளில் உதயமாகிறார்கள்..
குப்பை மேடுகளிலிருந்து அஸ்தமிக்கிறார்கள்..!

புழுதிபடிந்த தம் வெற்றுக் கால்களால்
யாரையோ மவுனமாய் அவமதிக்கிறார்கள்..!

இலக்கற்ற பார்வைகளின் மூலம்
அவர்கள் கடவுளர்களை ஏளனம் செய்து
தலைகுனியச் செய்கிறார்கள்…

”அவசியமற்ற குழந்தை பேறுக்கு
ஆணுறை பயன்படுத்துங்கள்”
உரக்க சப்தமிடும் ஒலிப்பெருக்கியை
உன்னிப்பாய் கவனித்தபடியே
இரவுகளை நோக்கி கடந்து செல்கிறார்கள்..

முன்னிரவுகளில்
காரணமின்றி யாரையோ சபித்தபடி
ஒரு தினத்தை நிறைவு செய்கிறார்கள்..
அல்லது
ஒரு தினத்திற்க்கான சூரியனை
கடலுக்குள் மூழ்கடிக்கிறார்கள்…!
எப்போதாவது
உடன் வரும் நண்பனொருவன்
தொண்டைக்குழி கடித்து
குருதியுறுஞ்சுவான்..!

வாரம் இருமுறை
புதர்களில் வல்லுறவு நிகழ்த்தப்பட்ட
பெண்ணொருத்தி நடுச்சாலையில்
வீசியெறியப்படுவாள்….!

பேரம் படியாத பள்ளிச்சிறுவர்களை
தண்டவாளத்தின் ஓரம்
ஞாயிற்று காலைகளில் சீருடையோடு
கண்டெடுக்கலாம்..!

இரவுக்காவலன்
துருப்பிடித்த கத்தி சுழற்றியபடி
உதடுவழியும் ரத்தத்துளிகளோடு
தினமும் வலம் வருவான்..!

உத்தமச்சாயல் தென்படும்
ஓரிருவரையும்
பகலிரவு பாராது
குரைத்துத்தபடி
துரத்தும் தெருநாய்கள்..!

மாதம் ஒருமுறை
பெரும்பொருள் வேண்டி
ஆதிகாளிக்கு ஆண்மகவு
பலியிட்ட தந்தையொருவன்
புன்னகைத்தபடியே
சிறை செல்வான்…!

மற்றபடி
இந்த வீதியில் ஒருவனாய்
வாழ்வதில் எனக்கொன்றும்
முறையீடல் இல்லை…!
ஒரு நீர்க்குமிழி 
உடையும் சப்தமென 
யாருக்கும் சலனமேற்படுத்தாது
வீதியுலவுகிறார்கள்
மனம் சிதைவுற்றவர்கள்..!

சற்றுமுன்புதான்
எனினும்
கடைசியாய் கவனமேற்றிய
சுயம் தொலைத்த ஒருவரை
உங்களுக்கு நிச்சயம்
நினைவிருக்காது..!

அவர்கள்
தன்னுடல் சுற்றிக்கொண்ட
கோணிப்பைகளின் மூலம்
கருணையற்ற இப்பிராந்தியத்தின்
நிர்வாணத்தை மூடுகிறார்கள்…!

உரத்த குரலில்
யாரையோ ஏசியபடி
பீடுநடை போடும் ஒருவன்
ஆழிப் பிரபஞ்சத்தை
அந்நியமாக்கி கொண்டிருக்கிறான்..!

சிறுதடி கொண்டு
தரை தட்டியபடி பயணிக்கும் ஒருவன்
மிச்சம் ஏதேனும்
மனிதம் இருக்கிறதா என
ஆய்வு செய்பவனாய் இருக்கக்கூடும்..!

எச்சில் ஒழுகியபடி
தேநீர் யாசிக்கும் அவளுக்கு
உலகத்தின் உச்ச வெறுப்பு
கொதிநீர் வடிவில்
பரிசளிக்கப்படுகிறது…!

கையில் எதுவுமின்றி
காற்றில் கிறுக்குபவன்
கடவுளுக்கு கடிதம்
எழுத எத்தனிப்பவன் போலும்…!

பொருள் வேட்கையின்
வெம்மை மிகுந்ததொரு வன்பொழுதில்..

இலக்கின்றி நகர்கிற
மனம் புரண்ட ஒருவன் மீது
துரோகித்த ஒரு தோழன்
சாயல் தென்படுகையில்

நீர்க்குமிழி உடையும் சப்தம்
உங்கள் காதுகளுக்கு மட்டும் எட்டி
சலனமேற்படுத்த துவங்குகிறது...!
அலைபேசிகளின்
அரூப சுழற்சியில் 
பயணித்துக் கொண்டிருக்கிறது
நீதியற்ற இந்த வாழ்க்கை…!

மனிதர்கள் இணைத்து
மனிதம் துண்டிக்கிறது
அலைபேசியின் அலைவரிசைகள்..!

ஒரு அழைப்பின் வழியே
அகன்ற நிலநடுக்கம் அனுப்பலாம்..!

ஒரு அழைப்பின் வழியே
இரவாத பெருமகிழ்வு பரிசளிக்கலாம்..!

அறிவிப்பற்ற துண்டித்தலின் மூலம்
எதிர்முனையை நிராகரிக்கலாம்..!
அதன் பொருட்டே அம்முனைக்கு
பெருவலி அளிக்கலாம்..!

தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் ஒருவர்
உங்கள் நினைவு எல்லையை
ஆக்கிரமிக்கலாம்..!

ஒரு குறுஞ்செய்தியின் வழியே
எவருக்கேனும் திசை காட்டலாம்..!

ஒரு சொட்டும் வியர்க்காது
நெடுநேரம் விரல்களால்
விளையாடலாம்..!

ஊழி பாவம் கழிதல் வேண்டின்
அலைபேசும் எண் மாற்றி
கணநேரத்தில் புனிதனாகலாம்..!

இயன்றால்..
மொத்த இயக்கமும் நிறுத்தி
சட்டை பற்றியிழுக்கும்
பக்கத்து இருக்கை மழலையோடு
கைகுலுக்கியும் உறவாடலாம்…!

Sunday, 10 November 2013





ஆதித்தொழில் செய்யும்
வேசி என்றழைப்பவர்களில்,
பாதிக்கும் மேல்
உன்னுடன் படுக்கையினை
பகிர்ந்து கொண்டவர்கள் என்பதறிவாய்..

ஒவ்வொரு தீண்டலுக்கும்
மலர்பவள் நீ.
ஒரே முறை மலரும்
பூச்சூடிக்கெள்வாய்..

விருந்துக்கு அழைக்கும்
உன் உதட்டுச்சாயம்
இறுதியினை எட்டிக்கொண்டிருக்கும் உன்
ஒரு சொட்டு உதிரத்தினால் ஆனது..

உன் போல்
அதீத அலங்காரங்களால் நிறைத்துக்கொள்ளும்
இச்செவ்வானமும்
உன் போல்
பின்னிரவுகளில் இருளடைந்து விடுகிறது..

தயக்கம் ஏதுமின்றி
நீ ஆடைகள் களைவதற்க்கு,
முதலில் நாணம் களைவது
என்பதுதான் அடிப்படை.

சிதைவு முடிந்து,
சிதைந்த மலர்கள் உதறி,
இன்னொரு சிதைவுக்கு
உன்னை புதுப்பிக்க
வீதியோரத்து ஒற்றைக்கோப்பை
தேநீர் போதுமாயிருக்கிறது…

புறக்காமம் தொலைத்து,
உயிர்க்காமத்து வெளியில்
உன் உணர்வுப்பூட்டுத் திறந்து
உச்சமெட்டும் ஒரு நன்னாளில்
அரைகுறை ஆடை மறந்து
ஆழ்ந்துறங்குவாய்…

புரளும்போது இடறிவிடும்
உன் இடதுகாலால்
தற்செயலாய் உலகினைத் தள்ளிவிடுவாய்..

அந்நாளில்
சுற்றுப்பாதை விலகி
சூரியனை முத்தமிட்டு
செத்தொழியும் இப்பூமி...!

















அந்த அறை உங்களுக்கானது..

எந்த அறைகளின் சாயலுமின்றி
பிரத்தியோகமாக
உங்களுக்கென உருவாக்கப்பட்டது…

உங்களுக்கான அறை
கதவுகளற்றது..
அதனால் பூட்டுதலும்
திறவுகோல் பாதுகாத்தலும்
அவசியமற்றது..

உங்களையன்றி யாருக்கும்
புலப்படாத அறையென்பதால்
நாற்புறத்து சுவர்களற்றது அந்த அறை..

எல்லா வழிகளிலும்
நீங்கள் நுழைய வேண்டியிருப்பதால்
வாசல்களென்று எதுவுமற்றது உங்கள் அறை..

உங்கள் அனுமதியின்றி
ஒளியும் காற்றும் வருவதில்லை என்பதால்
சாரளரங்களும் அவசியமற்றவை..

சம அளவில் சலவைக்கற்களாலும்
சிலந்தி வலைகளாலும்
சூழப்பட்டது உங்கள் அறை..

உங்கள் அறையின்
அலங்கார மலர்களிடமிருந்து
துர்நாற்றம் துயில்கிறது..

அவ்வப்போது
கழற்றி வைக்கப்பட்டிருக்கும் முகமூடிகள்
நறுமணத்தை உற்பத்தி செய்கின்றன..

கழிவு நீர் வழிந்தோடும்
உங்கள் அறையில்
இறுக்கமான உதடுகளும்
இலக்கற்ற வசவுச்சொற்களும்
மிதந்து கொண்டிருக்கின்றது..

வரவேற்பறையில் கிடத்தப்பட்டிருக்கும்
பரிசுப்பொருட்களுக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது
ஏராளமான உயிர்க்கொல்லி ஆயுதங்கள்..

உங்கள் அறையின்
ஒழுங்கற்றத் தன்மையில் மனச்சிதைவுற்று
ஆசுவாசம் கொள்வதற்கென
அதிகம் திறக்கப்படாததொரு
கடவுளுக்கான பகுதியில் நுழைகிறீர்கள்..

அங்கே…
புகைப்படமாய் அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு மழலையின் சிரிப்பு..!




நட்பு -1

ஏழாவது தளத்திற்க்கு

ஏறிக்கொண்டிருக்கிறேன்..

உரையாடலோடு உடன் வரும் நண்பன்

படிக்கட்டுக்களின் எண்ணிக்கையை

பாதியாக்குகிறான்…!


நட்பு -2


நண்பர்கள் யாருமற்று

தேநீர் அருந்தும்

அனாதைப் பொழுதுகளில்

தற்காலிகமாக

தேநீருடன் நட்பாகிறேன்..

புது நண்பனும் சுவையூட்டுகிறான்...!


நட்பு -3

எது வேண்டுமென அன்னைக்கும்,
எது வேண்டாமென தந்தைக்கும்,
தெரிந்திருக்கிறது..!

எப்போது எது வேண்டுமென்றும்
எப்போது எது வேண்டாமென்றும்
நண்பனுக்கு தெரிந்திருக்கிறது…!.


நட்பு -4

திரைகடலோடி

திரவியம் தேடிய நண்பன்

திரும்பியதும்,

முதலில்

தெருத்தெருவாய் ஓடி

நண்பர்களைத் தேடுகிறான்…!


நட்பு -5

நண்பர்கள் நீருற்றுகிறார்கள்..

நண்பர்கள் உரமிடுகிறார்கள்..

நண்பர்கள் களையெடுக்கிறார்கள்..

உலகெங்கும் செழித்து வளர்கிறது

காதல் பயிர்கள்..!


நட்பு -6

காந்தத்திற்க்கு
எதிரெதிர் துருவம்..

காதலுக்கு
இணையான துருவம்..

நட்புக்கு மட்டும்
எல்லா துருவங்களும்..!

நட்பு -7

சட்டை முனையில்

மடித்து வைத்து

மிட்டாய் கடித்து

பங்கிட்டதிலிருந்து துவங்கி

பகிர்ந்து கொள்வதிலெல்லாம்

சுவையளிக்கிறது நட்பு…!


நட்பு -8


ஒரு நட்பு

அறிமுகமாகிற கணத்தில்

உங்களுக்கு

ஒரு உலகமும்

அறிமுகமாகிறது….!



நட்பு -9


இலைகள் மூடிய

நிழல்மரமாய்

இளைப்பாறுதல் அளித்து

இளைப்பாறல் முடிந்து

வழியெங்கும்

இணைபிரியாத் துணையென

உடன் பயணிக்கிறது நட்பு…


நட்பு -10


இரு விரல் நீட்டி

ஒன்றினைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும்

ஒவ்வொரு நட்பும்

ஒன்றில் நல்லதும்

மற்றொன்றில் மிக நல்லதுமென

எதையோ ஒளித்து வைத்திருக்கிறது..!



நட்பு -11


கடவுள்

உருவமில்லா நம்பிக்கை…!

நட்பு

உருவங்களில்

உலவும் நம்பிக்கை….!


நட்பு -12


நிறைகுடம் அல்ல.

குறைகுடமும் அல்ல.

அன்பை இறைத்து ஊற்றி

நிறைக்கும் குடம்..

நட்பு…!
வென்றவனுக்கும்,
தோற்றவனுக்கும்,
வீர வரலாற்றுக் கல்வெட்டு..!

களத்தில் இறங்கி 
கத்தியெடுத்து வீசியவர்களுக்கு,
ஒரு கரித்துண்டு கிறுக்கல் கூட இல்லை…!
அவநம்பிக்கையை அடித்தளமிட்டு,
ஆகப்பெரும் வேகத்தோடு
எழுப்பிக்கொண்டிருக்கிறாய்..!
உன் சுவர்களை..

சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்வதன் மூலம்,
சுதந்திரமடைந்து விடுவதாக
எண்ணிக்கொள்கிறாய்..

நிர்மாணிக்கப்பட்ட சுவர்களால்,
நிச்சயிக்கப்படும் வெற்றிடத்தை,
நீ அறியாதிருக்கிறாய்..
அல்லது,
அறிந்ததும் அலட்சியமாயிருக்கிறாய்..

எதிரானவர்களுக்கு
எதிர்வினையாற்றாது,
சுவர் மூடிக்கொள்வதன் மூலம்,
எதிர்வினையை
உன்மீதே திருப்பிக்கொள்கிறாய்..

அடைக்கப்பட்ட சுவர்களின் மீது,
அமைக்கப்பட்ட தற்செயல் சாரளங்களை
பிறழ்மனத்தின் கைகொண்டு
கதவடைத்துவிடுகிறாய்…

நாற்புறமும்
கட்டிமுடிக்கப்பெற்ற
உனக்கான சுவர்களால்,
உலகத்தை துண்டித்துவிட்டதாக
பெருமகிழ்வு கொள்கிறாய்..

உன்னைத் துண்டித்துவிட்ட
எந்தச்சலனமும் அன்றி
இயல்பாகவே இயங்குகிறது
எல்லோருக்குமான உலகம்….!

களவாடப்படும் முன்
கடைசி ஆசை எதுவென்று
அரசலாற்று மணலிடம்
அரை மனதோடு கேட்கப்பட்டது..

இறுதியாய் ஒருமுறை
தாவணிப்பெண்கள்
தன்மீது பாண்டியாட வேண்டுமென
தண்ணீர் மல்க கேட்டது மணல்..

தாவணிப்பெண்கள்
வேற்றுடைக்கு மாறி
சடுகுடு விளையாட
துாரதேசம் போயிருப்பதாய்ச் சொல்லி,

கடைசி ஆசை
கண்ணியமாக மறுக்கப்பட்டு
மரணமளிக்கப்பட்டது மணலுக்கு..

ஆறும்,
கடற்கரையுமற்ற
அனாதை நகரமொன்றில்,

வீடுகட்டுவதற்கென
வீதியில் கொட்டப்பட்ட மணற்குவியலில்,
தெருவோரச் சிறுமிகள்
வீடுகட்டி விளையாடி
குதித்து சறுக்கி மகிழ்ந்ததும்

மீண்டு, உயிர்த்தெழுந்து,
மீண்டும் கண்மூடியது அம்மணல்..





யுத்தக் களத்திலிருந்து
வருகிறேன்..

அங்கே
ஒரு இணைப்பறவை இறந்து கிடந்தது..
இன்னொரு பறவை
இரைதேடிக் கொண்டிருந்தது..

இரு கைகளற்ற
உடலொன்றின்
இருகால்கள்
நீர் தேடி நகர்ந்து கொண்டிருந்தது..

உடைகள் அவசியமற்ற
நிர்வாண உடல்கள்
தரைபரப்பி
கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது..

வேரில் அமிலமூற்றப்பட்ட
மரமொன்று
இலைகளோடு சேர்த்து
கிளைகளையும் உதிர்த்து
கீழ்விழக் காத்திருந்தது…

உறுப்புகள் வீசியெறியப்பட்ட
ஆழ்கிணற்றிலிருந்து
மெல்ல மெல்ல
உயர்ந்தெழுந்தது குருதி ஊற்று..


நான்
யுத்தக் களத்திலிருந்து வருகிறேன்..

எதை எதை இழந்தேன் என்று
எண்ணிப்பார்க்க நேரமில்லை…

கருப்பையினுள் ஓர் உயிரோடு
வாயிலில் கிடத்தியிருக்கிறேன்
என் மனைவியை..

வயிற்றுக்கு உணவிடுங்கள்..

என்றேனும் யாம் போரிட வேண்டுமெனில்
எங்கள் வயிற்றுக்கு
இன்றேனும் நீங்கள் சோறிடவேண்டும்..!.
கடந்து போகிறவர்களெல்லாம்
கன்னத்தில் போட்டு நகர்ந்தபோதும்,

பன்னீர் தெளித்து பாலாபிஷேகம் 
நிகழ்த்திய போதும்,

அகல்விளக்கு திரி உயர்ந்து
புறவெளிச்சம் பரவியபோதும்,

அலங்கரித்து மாலையிட்டபோதும்,
ஆதியோடந்தமாய் தீபம் காட்டியபோதும்,

பெருவொலி எழுப்பி தேங்காயுடைத்த போதும்,
சிறுமணியடித்து சரணம் போற்றிய போதும்,

அசைவற்று மௌனம் காத்த
தெருவோரத்து அம்மன்..

நெடுஞ்சாலை அதிகாரிகள் புடைசூழ
வலிய எந்திரத்தோடு உடைத்து
ஆக்கிரமிப்பு என அகற்றியபோதும்
அசைவற்று அதே மௌனம்
காத்துக்கொண்டிருக்கிறாள்…

Saturday, 9 November 2013






மூன்றாம் தலைமுறையில்
கோசலையாயிருந்து,
தலைநரை எட்டியிருக்கும்
தந்தையின் காலத்தில்
கோசலையம்மாளாக இருந்தவள்..
எங்களுக்கு
கோசலைப் பாட்டியாயிருக்கிறாள்..

இறுதி வரையிலும்,
புகைப்படம் எதற்க்கும்
முகம் காட்டியதில்லை அவள்..

அபூர்வமாய்
அக்காவின் திருமணத்தில்
மெத்தப்பயந்து, முகம் வெளிறி,
சுவர் வெறித்து நின்ற

கோசலையப்பாட்டியை,

தோள் வரையில் சதுரமாய் வெட்டி,
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கூட்டி,
கண்களில் கசியும் நீர்
காட்சி பிம்பத்தை அசைக்க,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்கு
காணிக்கை கொடுத்திருக்கிறேன்…

சாயுங்காலத்திற்கெல்லாம்
தன் முகம் ஊர் முழுக்க பிரபல்யமாகும்
எனத்தெரிந்தால்,

கோசலைப்பாட்டி
முகத்தை துாக்கி வைத்துக்கொண்டு,
குறைந்தது மூன்று நாளைக்காவது
பட்டினியோடு பேசாமல்
படுக்கையில் கிடப்பாள்..!





ஆசீர்வதிக்கப்படாத
இரவின் உறக்கத்தை,
பலநாள் இந்த வீதியில்
காலடித்தடங்களாக பதிந்திருக்கிறேன்..

நிரந்தரப் பிரிவென்று அறியாத யாருடனோ
விடைபெறுதலுக்குப்பின்,
இந்த வீதியின் எல்லையை
நெடுநேரம் ஏக்கங்களால்
நிறைத்திருக்கிறேன்..

துயருற்று தலைகவிழ்ந்ததொரு
வன் பொழுதில்,
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளால்
இந்த வீதியை மூழ்கடித்திருக்கிறேன்..

அண்டை விட்டிலிருந்து
புறப்பட்ட சவ ஊர்வலத்தில்,
மிச்சமாயிருந்த சொற்களையெல்லாம்,
இறந்துபட்ட பூக்களின் ஊடே வீசியெறிந்து
இவ்வீதியை
அசுத்தமாக்கியிருக்கிறேன்…

அரவமற்று கடந்து போன
மற்றும் பலரை,
அலைகழித்த சிரிப்பொலியால்
மனம் கிழித்து,
இவ்வீதியெங்கும்
திரையிட்டிருக்கிறேன்..

இப்போதும் கூட..

தனிமை தள்ளிவிட்டுப் போன
ஒரு பெரும் பள்ளத்தில்,
நினைவுச்சருகுகளை நிரப்பி
சமதளமாக்கிக் கொண்டிருக்கிறேன்
இவ்வீதியை…!





ஒரு தினம் அரசனாயிருக்க
ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அறிந்திராத அணிகலனும்
கேள்வியுறாத மேலாடையுமென
துவங்கியது நகர வீதியுலா..

தெருவோரத்து புல்வெளியில்,
தேகத்தில் ஆடையற்றுக் கிடந்த
சிறுவனுக்கு,
தேரிலிருந்து இறங்கி,தெருவில் நடந்து,
மேலாடை கழட்டி
மேனி மூடிப் போகிறேன்..

தகுதியற்ற செயல் இதுவென்று
தலையிலிருந்த கிரீடம்
பறிக்கப்பட்டது…

பிறிதொருநாள்
யாசகனாயிருக்க ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அவலட்சண ஆடையணிந்து,
அலைந்த உடல் மடிந்து,
வீதியெங்கும் கால் அலைந்து,
அகண்ற பாத்திரம் நிறைத்த உணவை,

வயிறு சுருங்கி, விழி இடுங்கி,
வழியில் நின்ற சிறுமிக்கு
பாதியென்று பகிர்ந்தேன்..

தகுதிக்கு மீறிய செயல் இதுவென்று
அகண்ட பாத்திரம் பிடுங்கப்பட்டு,

அதனினும் சிறிதாய்
உடைந்த பாத்திரம் ஒன்று கொடுக்கப்பட்டது….

வேறொரு தினம்
கடவுளாயிருக்க ஆசீர்வதிக்கப்படும்
நாளுக்கென காத்திருக்கிறேன்..!







**விரிவாக்கப்பட்ட தொழில் நகரம்**


சலவைக்கற்களால்
சதுரவெளியாக்கப்பட்டிருந்த
இந்த அறை,
சீரற்ற புல்வெளிகளால் நிறைந்திருந்தது..

குளிரசாதனப் பெட்டி
பொருத்தப்பட்டிருக்கும்
இந்த வலப்பக்கச் சுவற்றில்,
வேப்பமரம் ஒன்று
காற்றை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தது..

கொடுமுகம் காட்டி
பணியாளன் ஒருவனை தண்டித்த
இந்த எதிர் இருக்கையில்,
ஓநாயொன்று சிறுமுயலை
வேட்டையாடிக் கொண்டிருந்தது…

உணவு புசித்து
உடற்பசியாறிய
இந்த ஜன்னலோர மேசையில்,
வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு
இறுதியாய் புணர்ந்து கொண்டிருந்தன..

அனுமதியோடு உள் நுழையச் சொன்ன
இந்த அலுமினியக் கதவில்,
ஆடு மேய்க்கும் சிறுமி ஒருவள்
பூப்பெய்தியிருந்தாள்…

அண்டத்தின் ஒலிலைகள் அடங்கி,
நிசப்தம் நிறையப் பெற்ற முன்னிரவில்,

அலுவலகத்து அலங்கார மேசையில்
அரைபாகம் நீர் நிரப்பப்பெற்ற
கண்ணாடிக் குடுவையில்,

முக்காலடியினும் கீழ் வளர்ந்த
மூங்கில்மர சிற்றிலையின்
அனல் கக்கும் கேள்விகளுக்கு,
பதிலேதுமின்றி கைகட்டி
அமைதியாயிருக்கிறேன்…!
ஓங்கியொலிக்கப்பெற்ற
ஒற்றை வார்த்தையில் துவங்கியது.
ஒரு கலவரம்..

அம்முனையில் 
பெருங்கோபம் நெய்யப்பட்ட
உரத்தக் குரலின்று கிடைக்கப் பெற்றது
ஓர் அதிகார ஆணை..

தலைக்குமேல் உயர்த்தப்பட்ட
தடி பொருத்தப்பட்ட கைகளின்
எண்ணிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை…

முதலில் நின்றவர்களுக்கே முன்னுரிமை.
அடி வாங்குவதில்..

நிகழ்வினைத் தாமதமாக உணரும்
இரண்டாம் வரிசைக்காரர்களுக்கு
பளபளக்கும் காலணியால்
வேறொரு வைத்தியம் நிகழ்த்தப்பட்டது..

தெருவோர சிறுகற்களும்
இறுகிப்போன கரங்களும் அன்றி
ஆயுதம் வேறொன்றுமில்லை.
இம்முனை எதிர்ப்பாளர்களுக்கு..

மனவுறுதியின் அளவீடற்ற எல்லைகளை
எளிதில் கடந்துவிடுகிறது.
ஆணவத்தால் நிகழ்த்தப்படுகிற
ஆயுத ஆணை..

சகலத்துயரமும் நிகழ்த்தி முடிப்பெற்ற
சூன்யப் பொழுதில்,

உரிமை வேண்டுமென கோரப்பட்ட
பதாகையொன்றில் உறைந்துகிடக்கும்
தோற்கடிக்கப்பட்டவனின் குருதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது..
ஆயிரமாண்டுகளின் வெப்பம்….!
எல்லா தருணங்களிலும்
யாரேனும்,
எதைக்கொண்டோ,
நிரப்பிவிட்டுப் போகிறார்கள்..
என் பாத்திரத்தை..

ஒரு முறை
மழலையின் சிரிப்பொன்று,
என் பாத்திரத்தில்
ஆனந்தத்தை நிரப்பிவிட்டுப் போனது..

வேறொருநாள்,
ஒரு பெண்ணின் கண்ணீர்,
என் பாத்திரத்தில்
துயரத்தை நிரப்பிவிட்டுப் போனது..

பிறகு
ஒரு உழைப்பாளியின் வியர்வை,
என் பத்திரத்தில்
உறக்கத்தை நிரப்பிவிட்டுப் போனது..

மற்றொருநாள்
ஒரு பறவையின் எச்சம்,
என் பாத்திரத்தில்
பசுமையை நிரப்பிவிட்டுப் போனது..

நேற்றைய விடியலில்,
கடந்துபோன ஒரு தேனீ,
என் பாத்திரத்தில்
மகரந்தத்தை நிரப்பிச்சென்றது..

இப்போதும்கூட..
மவுனமும், மேகமும் போர்த்திய
இந்த நிலவு,
வெறுமையை நிரப்பிக் கொண்டிருக்கிறது..
என் பாத்திரத்தில்…!

ஒரு கவிதைக்கான
முதல் வார்த்தையை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்..

தரையிலிருந்து மேலெழும்பிய
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்,

பெருநீர்ப் பரப்பில்,
மென்வயிறு உரச
சிறகடித்து பறந்ததொரு
பறவையினையும்,

வெற்று காகிதத்தில்
நீள் நாக்கு துழாவி,
மிச்சமிருக்கும் உணவைத் தேடும்
இளைத்த பசுவினையும்,

பயண ஜன்னலுக்கு வெளியே,
இறந்து போன பூச்சரம்
வீசிய வளையல் கரத்தையும்,

நிராகரிக்கப்பட்டு,
தலைகவிழ்ந்து
மௌனமாய் திரும்பும் யாசகனையும்,

அடம்பிடித்து அழும் மழலையை,
ஆவின் பாலுடன் ஆற்றுப்படுத்தும்
தந்தையினையும்,

கடந்து வந்துவிட்ட
இந்த இரவில்,

ஒரு கவிதையின்
கடைசி வார்த்தைக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
அகல நீளமெல்லாம்
அவரவர் வசதிகளுக்கு உட்பட்டது..
ஆயினும்
எல்லோருடைய மீன் தொட்டிகளும்
எல்லா பக்கத்திலும் 

அடைக்கப் பட்டிருக்கிறது..

நிர்ணயிக்கப்பட்ட துாரம் வரை நீந்தி
பின் திரும்பி…
பின் நீந்தி..
ஒரு ஊசலின் 

விசையினைப் போலிருக்கிறது.
உள்ளிருக்கும் மீன்களின் வாழ்க்கை..

பாறை படர்ந்த பாசிகளை தின்று,
புழு கோர்த்த துாண்டிலில் அறிவற்று
அகப்பட்டுக் கொள்வதை மறந்து,
அவ்வப்போது துவப்படும் கடுகளவு
உணவு துாற்றலுக்கு காத்திருக்க
கற்றுக் கொண்டிருக்கிறது அம்மீன்கள்…

உள்ளீடப்பெற்ற எந்திரம் உமிழும்
நீர்க்குமிழ்களில் அவைகளுக்கு எந்த
உயிர்க்காற்றும் கிடைப்பதில்லை..

செயற்கை செடிகளின்
அச்சிடப்பட்ட பச்சை வர்ணங்கள்
அவைகளுக்கு மூச்சுமுட்டுவதை
எவரும் அறிவதில்லை..

கண்ணாடித் தொட்டிலிருக்கும்
வண்ண மீன்களுக்கு
இரவின் இருள் என்பது
எப்போதோ நினைவிலிருந்து
அகற்றப் பட்டுவிட்டது..

உள்ளிருக்கும் எல்லா மீன்களும்
தண்ணீரில் நீந்திக் கொண்டிருப்பதாக
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..


உங்கள் சுயநலத்தில்
நீந்திக் கொண்டிருப்பதாக
அவைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன…!
நட்சத்திர விடுதியொன்றினுள்,
நண்பர்களுடன் குழுமிய 
உணவு நேர பகிர்தலுக்கு
தலைமையேற்று நுழைகிறீர்கள்..

எந்திரத்தன மிடுக்கோடு,
இயல்பற்ற பணிவுடன்
உணவு பட்டியல் ஒன்றை
உங்களிடம் நீட்டுகிறார்
சீருடையணிந்த சேவகன் ஒருவர்..

தோழர்களுடன் ஆலோசனை முடித்து,
உங்கள் விருப்ப உணவை
குறிப்பெடுத்துக் கொள்கிற சேவகன்,
நீங்கள் பொறுமையிழக்கும்
இறுதி நொடியில் பறிமாறலுக்கு வருகிறார்…

கலகலப்பும், கலந்துரையாடலுமாய்
கை துடைத்து முடிவுக்கு வருகிறது..
உங்கள் உணவுப்பொழுது…

உறையிட்டு மடித்த அட்டையில்
உள்வைத்து அளிக்கப்படும்
விலைப்பட்டியலில்
மதிப்புக் கூட்டு வரியும்,
அலங்கார வரியும் உங்கள்
கவனம் கலைப்பதேயில்லை..

அலட்சியமாக கொடுக்கப்பட்டு,
உங்களது பணத்தின் மீதத்தை,
அதைவிட அலட்சியமாகவே
சேவகனுக்கு அளித்துச் செல்கிறீர்கள்..

மீதமளிக்கப்பட்ட பணத்தை
மிடுக்கு குறையாது பெற்றுக்கொண்டு
கண்களால் நன்றி சொல்லி
கடந்து போகிறார் சேவகன்…

அன்றைய தினத்தின்
அந்தி கடந்த
முன்னிரவு முடிவுப் பொழுதுகளில்,
நீங்கள் கடந்து போகிற சாலையில்..

அளவிடப்பட்ட விலையோடும்,
அளவிடப்படாத பரிவோடும்,
கைகளில் ஏந்தும்
சாலையோர உணவகத்தில்
களித்துப் பெருக உண்ணும்
சீருடையற்ற சேவகனைக் கண்டு
சற்றே அதிர்வுறுகிறீர்கள்…

உங்களிடம் சொல்வதற்கென்று
அவனிடம் செய்தி ஒன்றும்,
அவனிடம் கேட்பதற்கென்று
உங்களிடம் கேள்வி ஒன்றும்,
நிச்சயம் இருக்கிறது….!
கையிலிருந்த கைத்தடியை
ஊன்றிக்கொண்டதாக தெரியவில்லை
முதுகு வளையாத அவ்வை..

ஐந்து தலை இருந்த பக்கமாக
கழுத்து வலிக்க சாய்ந்திருந்தார்..
இராவணன்..

தலை சொறிந்த வேகத்தில்
ஒரு காது மட்டும் கழன்று விழுந்தது.
முயலுக்கு..

முன்புறம் கைகட்டி தலைப்பாகையோடு
வேறு திசையில் மேல் நோக்கி நின்றார்.
விவேகானந்தர்..

மீசை முறுக்கியதில் விரல்களில்
ஒட்டிக்கொண்ட மையை
வேட்டியில் துடைக்கிறார் பாரதியார்..

ஆளுக்கொரு வசனம் பேசி முடித்ததும்
அமர்க்களமாய் முடிந்தது ஆண்டுவிழா..

இறுதியாய்..
எல்லோரிடமும் கேட்கப்பட்டது
அந்த பொதுவான கேள்வி..

”நீ வளர்ந்து பெரியவனானதும்
என்னவாக ஆகப்போகிறாய்..?”

இராவணனும், முயலும்
டாக்டராக போவதாக சொன்னார்கள்..

அவ்வையார் 

என்ஜினியர் ஆகப்போவதாகவும்,
விவேகானந்தர் 

ஏரோப்ளேன் ஓட்டப்போதாகவும்
தடுமாறி சொன்னார்கள்..

கடைசியாக 

பாரதியாரிடமும் அதே கேள்வி..

யோசிக்கவேயில்லை.. சட்டென சொன்னார்..

”நான் பெரியவனானதும்
பெரிய பாரதியார் ஆவேன்…”


அலைவரிசை தெளிவுக்கு
ஆண்டெணா சுழற்றி, நிறுத்தி..

மண்டல ஓளிபரப்புக்கு
மணிக்கணக்கில் காத்திருந்து..

இடையிடையே நிகழும்
இடையூறுகளுக்கென
தடங்கலுக்கு வருந்தினால்,
தாராளமாக மன்னித்து..

விழிகள் உறைந்து,
வேறுதிசை விலகாது பார்த்த,
ஒலியும் ஒளியும் சுகத்தில்
ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை..

இருபத்திநாலுமணி நேரமும்
இடைவிடாது இயங்கும் எந்த
இசைத் தொலைக்காட்சியிலும்….





உன்னிடம்
கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு
பதிலளிப்பதற்கான சந்திப்பு அது…

கூடையில் நிரம்பிய
கேள்விகளுடன் வந்தவள்.
வீசுவதற்க்கு வசதியாக
எதிரில் அமர்ந்து கொள்கிறாய்..

மென்மையாக துவங்கிய
உன் முதல் கேள்வி
மலராயிருந்தது..
மகரந்தம் வீசியது….

தொடர்ந்த கேள்விகள்
முட்களாயிருந்தது..
தைத்தது….

மிச்சமாயிருந்த கேள்விகள்
கூர் முனை கத்தியாயிருந்தது..
கிழித்தது…

கூடை கேள்விகள்
தீர்ந்து போனதும்
இன்னும் என்ன கேட்பதென்ற
கூடையில் இல்லாத
இன்னொரு கேள்வியும்
உன்னால்
கேட்கப்படுகிறது…

மௌனத்தில் மூழ்கிய
நிமிடங்கள் நகர்ந்ததும்..

பின்புறத்திலிருந்து எடுத்து
முன்னால் வைத்த
என்னுடைய கூடையிலும்
நிறைய கேள்விகள்
நிரம்பியிருந்தன….
நிழல் தெளிக்கும்
பெரு மரத்தின் கீழே
படர்ந்து கிடக்கும்
நெரிசலற்ற நெடுஞ்சாலை..

வண்ணப்பொடிகள் துாவிய
அலங்கார அழகுடன்,
கருந்தரையில்
உதயமாகிறார்
காக்கும் கடவுள்..

மலர்ப்பாதம்..
பொன்னிற இடை உடை..
ஆயுதமேறிய ஒருகரம்..
பெருமித மகுடம்..
வாடாத வண்ண மாலை..

மெதுவாய்,
மென்மையாய்
உருவெடுக்கிறார் கடவுள்..

கருணை பொழியும்
கண்கள் வரைந்து முடித்ததும்,
அருள் பாலிக்கும்
ஒரு கை மிச்சமிருக்கிறது..

வரைவதற்கான
வண்ணப்பொடிகள்
தீர்ந்துபோனதும்...

முழுமையுறாத அந்த
வரமளிக்கும் கரத்திற்கு
மிக மிக அருகிலேயே இருக்கிறது..
வெறுமையான திருவோடு ஒன்று…







வெற்றுத் தீப்பெட்டிகளுடனும்,
குளிர்பான மூடிகளுமாய்,
இன்னும் சில இதர பொருட்களோடு,
ஒரு விடுமுறை தினத்தின் முற்பகலில்
உற்சாக வேகத்துடன் தயாராகிறது..
பைரவி குட்டியின் நீண்ட ரயில்..!

கூடத்து ஓரப் பணிமனையில்
நிறைவடைந்த பைரவியின் ரயிலுக்கு,
கூடத்திலேயே சோதனை ஓட்டமும்
வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகிறது…

கொடியசைத்து வழியனுப்ப 
யாருமில்லாது,
நடைமேடை அவசியமற்று,
தண்டவாளம் ஏதும் தேவைப்படாது,
தரையில் ஓடத்துவங்கியது
பைரவியின் ரயில்..

வாசல்..
வரவேற்பறை சந்திப்பு..
சமையற்கூடம்..
தோட்டம்..
சுற்றுச்சுவர் இறுதி..
இன்னும் சில நிறுத்தங்களோடு,
இதமாக பயணிக்கிறது
பைரவியின் ரயில்..

கையில் பிடித்த கயிறு
இழுக்கப்படும் வேகத்திற்கேற்ப
விரைவு வண்டியயெனவும்,
அதி விரைவு வண்டியெனவும்,
அடிக்கடி பெயர் மாற்றப்படும்
பைரவியின் ரயில்…

ஆளில்லா கூடத்து வாயில் வழியே,
அலைபேசியில் ஆழ்ந்த அப்பா
கவனமின்றி கடந்ததில்,
பாதங்கள் மிதித்து பெருவிபத்து நிகழ்ந்தது..
பைரவியின் ரயிலுக்கு…

தவறுக்கென வருந்தி, 
மண்டியிட்டு,
மன்னிக்க கோரிய பைரவியின் அப்பா,
மற்றுமொரு ரயில் வாங்கித்தருவதாய்
வாக்களித்து மறுபடியும்
அலைபேசியில் ஆழ்கிறார்..!

முன்பகுதியிலிருந்து மூன்று பெட்டிகள்
முற்றிலிமாய் சேதமடைந்து,
இரண்டு சக்கரங்கள் தொலைந்த இடம்
இன்னும் தெரியாததால்
பரிதாபமாய் மிச்சமிருந்தது.
பைரவியின் ரயில்…

அவசரகால நடவடிக்கை பலனற்று,
பழுது நீக்கும் படலம் பாரபட்சமின்றி
நேரம் தின்று கொண்டிருந்ததால்,
பகல் முடிந்தும் முழுமையடையாது
பழுதோடு எச்சமிருந்தது..
பைரவியின் ரயில்..

முன்னிரவு நெருங்கத் தொடங்க,
கூடத்து ஓரப் பணிமனைக்கு ஒதுங்கிய
பைரவியின் ரயிலின் பயணம்,

அடுத்த விடுமுறை தினம் வரை
தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது….!







மௌனம் பற்றிய
உங்களது அளவீடுகள்
வெகு சாதாரணமானவை..!

உங்கள் சுய பாதுகாப்புக்கென
அதை பயன்படுத்திக்கொள்கிறீர்கள்..!

உங்களது பெருவெற்றிக்குப் பிறகான
நிலைப்பாடாய்
அதை காட்சிக்கு வைக்கிறீர்கள்..

உங்கள் அறியாமை இருளுக்கு
வர்ணமாய் அதை பூசிக்கொள்கிறீர்கள்..!

மௌனத்தின் மூலம் நீங்கள்
பக்குவப்பட்டுவிட்டதாக
உலகுக்கு அறியத்தருகிறீர்கள்..

தனித்துவிடுகிற உங்கள் கருத்துகளுக்கு
கவசமென அதை அணிகிறீர்கள்..!

மௌனத்தின் சிற்றின்பங்களுக்குள்
திருப்தியடைகிற நீங்கள்
மௌனத்தின் எதிர் வினைகள் குறித்த
விவாதங்களை ஏற்பதாக இல்லை..!

மாறாக உங்கள் கதவுகளை
இன்னும்
இறுக்கமாக மூடிக்கொள்கிறீர்கள்..!

என்றேனும் உங்கள் நீண்ட மௌனம்
உடையும் தருணத்தில்..

உங்கள் பாதுகாப்பும் உடையலாம்.
அறியாமை வெளிச்சமிடப்படலாம்..
சிறுபிள்ளைத்தனம் நிரந்தரமாகிவிடலாம்…
உங்கள் கருத்துக்கள் துாக்கிலிடப்படலாம்…
இயல்பு வர்ணங்கள் நீர்த்துப் போகலாம்…

உங்கள் ஆதார ஆயுதம்
பலனற்றுப் போனதென்று
உணர்கிற பொழுதுகளில்..

கூக்குரலிடும் உங்கள் வார்த்தைகளை
உதறிவிட்டு
மௌனமாய் கடந்து போகும்
உலகினை நீங்களும் மௌனமாகவே
பார்த்துக் கொண்டிருக்கலாம்..

வேறு வழியின்றி...!






உன் குறுஞ்செய்திகளால்
நிரம்பி வழிகிறது..
என் அலைபேசியின் உள்ளுறை பெட்டி..

புலர்ந்த காலை மகிழ்வாக ஒன்றும்
நிறைந்த இரவு இனிதாக ஒன்றுமென
உன் குறுஞ்செய்திகளின் கடமை
கதிரொளியின் தினப்பணி…

நலம் பெற வேண்டிய குறுஞ்செய்திகள்
உன் பூஜையறையிலிருந்து
புறப்பட்டு வந்தவை..

வெற்றிக்கு வாழ்த்திய செய்திகள்
பாதி பங்களிப்புகள்..

தத்துவம் பேசிய செய்திகளில்
சப்தமில்லாமல் என்னை
பக்குவப்படுத்துகிறாய்…

உன் வாழ்த்துச் செய்திகளுக்குப் பின்தான்
துவங்குகிறது
என் பண்டிகைக் கொண்டாட்டம்..!

உள்ளிடப்பெற்ற எழுத்துருக்களில்,
ஒத்திசைவாய் தோற்றமளிக்கும்
உன் ஒவ்வொரு செய்தியிலும்,
உள்ளிடப்பட்ட புன்னகை
என் உதடுகளுக்கும் இடம் மாறுகிறது…

பதிலுரைக்கும் என் குறுஞ்செய்தி
பலன் எதிர்பாராத
உன் கனிவுச் செய்திகளுக்கு,
வெறும் சம்பிரதாயம் மட்டுமென்பது
இருவருக்கும் தெரிந்திருக்கிறது…

பனித்துளி குளுமை..
மலர் வாசம்..
போர்வை கதகதப்பு..
மழலை புன்னகை..
கரையோர காற்றென
எல்லாமுமாய் இருக்கிறது
உன் குறுஞ்செய்தி…

அறிமுகச் சந்திப்பில்,
பரஸ்பரம் பரிசளித்த
உன் கைக்குட்டையின்
கருநீலத்தில் கையொப்பமிட்ட
”வாழ்நாள் வாழ்த்துக்களுக்கு”
சற்றும் சளைத்ததேயில்லை..
உன் சளைக்காத குறுஞ்செய்திகள்.….!

Friday, 8 November 2013



யாரையும்
அன்புடன்
அழைத்ததாக தெரியவில்லை..

இடையில்
நெகிழும்
உடையோடு
எந்த நடிகையும்
குத்துவிளக்கேற்றி
முதல் விற்பனை
துவங்கியதாக
தெரியவில்லை…

குறையிருந்தால்
எங்களிடமும்
நிறையிருந்தால்
நண்பர்களிடமும்
சொல்ல அறிவுறுத்துகிற
வாசகம்
ஏதுமில்லை.

சேவை
சரியில்லை என்று
சேவகனிடம்
வாடிக்கையாளர்
யாரும்
சண்டையிட்டதாக
தெரியவில்லை..

விளையாட்டு
போட்டி நிதி,
கட்சிகளுக்கான
வளர்ச்சி நிதி,
யாரும்
வசூலித்ததாக
தெரியவில்லை..

கை நுழைய மட்டும்
அரையடி இடத்திற்கு
இடைவெளி விட்டு
கம்பி வளை
முகப்பில்
மூடப்பட்ட
மதுபானக்கடையில்...

குறைந்த பட்சம்
நன்றி..
மீண்டும் வருக
என்று கூட
பெயர் பலகையில்லை…!





இலைகளால்
கண்ணீர் துடைத்து,
மெதுவாய் தயங்கி,
விசும்பும் குரலில்
கடவுளிடம்
மன்னிப்பு கேட்கிறாள்.
ஏவாள்..

பின்வாசல் வழியே
உள்ளே நுழைந்து,
”மன்னிப்புக் கேட்க ஒன்றுமில்லை,
நன்றி வேண்டுமானால்
பெற்றுக்கொள்ளுங்கள்”
மெல்லிய கிறக்கத்துடன்
கடவுளிடம் சொல்லிவிட்டு
பதிலுக்கு காத்திராமல்
நகர்ந்துவிடுகிறான்.
ஆதாம்..

எல்லா பழங்களும்
விஷமாகிவிட்ட
ஆப்பிள் மரக்கிளையில்
கடவுளிடம் பரிசு பெறும்
கனவோடு அயர்ந்துறங்கி
ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது
பாம்பு..

மௌனமாய்
புன்னகைக்கிறார்
கடவுள்..

திட்டமிட்டது..
திட்டமிட்டபடியே நடக்கிறது…




பள்ளியெழுச்சி
பாடலோடு
துயில் எழுவீர்..

அபிஷேகம்
அலங்காரம் முடிந்து,
பக்தி பெருக்கோடு வந்த
பக்தர்களுக்கு
தரிசனம் தருவீர்..

உச்சகால பூசைக்கு பின்
ஓய்வு..

முடித்து..

பால்,தேன்,
பஞ்சாமிர்தம்,
இன்னபிற
அபிஷேங்களுக்கு பிறகு
திவ்ய ரூபத்தில்
காட்சியளிப்பீர்..

அமுத படையலோடு
அர்த்தஜாம பூஜை முடித்து
ஆனந்த சயனத்திற்கு
போகும் முன்.
உணவு செரிக்க
பிரகாரத்திற்குள்
நடந்து செல்வீர்..

குறைந்த பட்சம்,
கோபுரத்துக்கு வெளியிலும்
வந்தால்...

வாசலுக்கு அருகே
வயிறு சுருண்டு,
உடல் நீட்டி,

பாத்திரத்திற்க்கு
பக்கத்திலயே
படுத்திருக்கும்
யாசகனுக்கு,

அதிகம் வேண்டாம்..
ஐந்து ரூபாய்
போட்டுச் செல்லுங்கள்..
பரம்பொருளே...

காலையில்
உங்களுடனே
பள்ளியெழுச்சி
பாடல் கேட்டு
விழித்தெழுபவன்,

பாத்திரத்தில் கிடந்த
ரூபாய் கொடுத்து,

தள்ளி நின்று,
விரல்கள் தீண்டாமல்
காகித கோப்பையில்
கொடுக்கப்படும்
தேநீர் குடித்து விட்டு..

உற்சாகமாய்
பிச்சையெடுக்க போகலாம்….
இந்த நாள்
இனிதாகும்..








சாரங்கபாணி என்றுதான்
பெயர்.
தமிழாசிரியர் ஆனதும்
தமிழ்மணி ஆனார்..!

சாயங்கால சூரியனுக்கு
சாயம் போனதாய்
மஞ்சள் நிற சட்டை..

கறை கழுவி
சலவை செய்த நிலவென
வெள்ளையில் வேட்டி..

நெடுங்காலம்
நினைவுக்குள் அகலாத
அவரது நிரந்தர அடையாளம்..

தானமும் கர்ணனும்,
என ஒப்புமையிட்டால்
தமிழ்மணியும் வேட்டியும்,
என உவமையிடலாம்..

வேட்டி கட்டியவன்
வேடிக்கைத்தமிழன் என
வீண் கருத்து சொல்பவர்களை,
வேண்டாத தமிழன் என்பவர்..

யாரும் எதிர்பாராது
ஒருநாள்
சட்டென நிகழ்ந்தது
அவரது விருப்ப ஓய்வு..

மகள்களுக்கு திருமணம்,
மகனுக்கு வேலைவாய்ப்பு என
சேமித்த செல்வமெல்லாம்
செலவாகிப்போனதில்,
செல்வராயிருந்தவர்
செல்லாதவரானார்…

ரத்த சொந்தங்கள் எல்லாம்
ரத்தம் குடிக்கும் பூச்சியாய்
சொத்து முழுதும் உறிஞ்சிவிட,

தமிழ்மணியிடம்
மிச்சமிருந்தது..,
வாழ்க்கை கொடுத்த தமிழும்,
வாழ்க்கை கெடுத்த வறுமையும்..

பின்னொரு நாளில்,..

நகரத்து வீதியில்
நகராத கூட்டமிருக்கும்
நகைக்கடை ஒன்றில்
இரவுக்காவல் வேலையொன்று
இருப்பதாக காதுக்கு
கசிந்தது ஒரு தகவல்…

விடியும் வரை
உறங்காமலிருப்பது
அடிப்படை தகுதி

நல்லது..
வறுமைக்கு பிறகு
வளமையோடு சேர்த்து
தொலைந்துபோன உறக்கம்
வசதியாயிருந்தது...

அடுத்த தகுதிதான்
அச்சமூட்டியது.

கணுக்கால் வரையிலான
கால்சட்டை அவருக்கு
கட்டாய சீருடை என்பது
தங்கச்சிலையின் தலைக்கு
தகரத்து கிரீடமாய்
ஒட்டாத உறுத்தலாயிருந்தது…

”போகும்” வரை வேட்டி
என்றிருந்தவர்
பொருளாதார நிலை
புறந்தள்ளியதில்
மாறினார்..

ஒரு வாரம்
மட்டும்
ஓடியிருக்கும் அவரது
இரவுக்காவல் காலம்..

நிலவு துாங்கியெழுந்த
ஒரு முன்னிரவில்,

நிச்சயிக்கப்பட்ட மரணத்தை
நீட்டிக்க விரும்பாது
சட்டென கட்டிக்கொண்டார்…
வீட்டிற்க்கு வரும் விருந்தாளியை
வீதிக்கே சென்றழைக்கும்
விருந்தோம்பும் பண்பு அது.…

துாக்கில் தொங்கினார் தமிழ்மணி..
துாக்கு கயிறாய் தொங்கியது
அவரது வேட்டி…!


எளிதாய் கிடைப்பதால் 
நட்பின் இறைநிலை அறியாத
தலைமுறை எச்சம் நான்...!

காதல் பற்றி எழுதி 

காதலிக்கு காட்டிய நான்
நட்பு பற்றி எழுதி 

நண்பர்களிடம் கூட காட்டியதில்லை.

காத்திருக்க வைத்ததற்கு
மன்னிக்க சொல்லி
காதலியிடம் மண்டியிட்ட 

கெஞ்சல் கணங்களில் எல்லாம்
நட்புக்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி
குற்றம் செய்திருக்கிறேன்...!

நானே மறந்த என் பிறந்த நாளுக்கு
நள்ளிரவு வாழ்த்து சொன்ன ,
யாருடைய பிறந்த நாளும்
எனக்கு நினைவிருந்தது இல்லை..

காதல் நொறுக்கிய காலங்களில்,
மதுக்கோப்பை நீட்டாது,
தேநீர் கோப்பை திணித்து
தெளிவு தந்தது நட்பு..

நிலையிழந்த காலங்களில் மகுடமும்,
சிறகிழந்த காலங்களில் இறகும் தந்தது நட்பு..

நினைவு தெரிந்த நாள் முதலான நட்புக்கு
நினைவுக்கு தெரிந்து எதுவும் செய்ததில்லை நான்..

ஏதேனும் ஒரு காரணம் காட்டி
எப்படியேனும் கேட்கவேண்டும்
குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு..

அதற்கும் கூட..


”நமக்குள் என்ன மன்னிப்பு..?
மன்னிப்பு கேட்டதற்காக மன்னிப்பு கேள் ”
என்றுகூட கோபிக்கலாம்

அந்த உயரிய நட்பு....!


சற்று முன் வரை 
உயிரோடிருந்த ஓர் அணில்..

ஒரு துணை தேடி 
துள்ளித் திரிந்திருக்கலாம்.

இரைதேடி 

பசியோடு அலைந்திருக்கலாம்..

வசிப்பிடம் ஒன்றின்
வழி தேடியிருக்கலாம்...

விசாரணைக்கு உட்படாதொரு
ஒருதலைபட்ச விபத்தின் 

காரணகர்த்தா நான்..!

குருதிபடிந்த முன்சக்கரம்
கழுவி முடிக்கையில்,
குருதியிழந்த அணில் நினைவும்
கழுவப்பட்டுவிட்டது..

பின்னொரு நாளில்,
பெருந்துயர் காலத்தில்,
பாவமென்ன செய்தோமென
பட்டியலெடுத்து நிரடுகையில்

நிச்சயம் இச்சம்பவம்
நினைவுக்கு வராமல் போகும்...!










ஒரு தொலைக்காட்சித் தொடரின்
எழுத்துருக்களோடு துவங்குகிறது,
தரைதளத்திற்கு சற்று மேலான
உங்கள் பயணம்..


உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு பாத்திரம்
உங்களையும் தேர்ந்தெடுக்கிறது..

துயரப்படுகிற உங்கள் பாத்திரத்திற்கு
அனுதாபப்படுகிறீர்கள்..

அலைக்கழிக்கப்படுகிற உங்கள் பாத்திரத்திற்கு
ஆத்திரமுறுகிறீர்கள்...

உங்கள் பாத்திரத்திற்கான கண்ணீர் உங்கள்
கன்னத்தின் வழியோடி
உதடுகளில் உப்புக்கரிக்கிறது..

இடைமறிக்கிற இடைவேளை
வர்த்தக விளம்பரங்களை உங்கள்
வசவுகளால் நிறைத்துவிடுகிறீர்கள்...

இக்கட்டானதொரு சூழலில்
இடறி விழும் உன் பாத்திர தருணங்களில்
”தொடரும்” என முடிக்கும் தொலைக்காட்சிக்கு
துர்மரணம் நிகழ சபிக்கிறீர்கள்...


சற்று நேரம் சரிகிறது..

அண்டை வீட்டிலிருந்தொரு
அனுதாப மரணச்செய்தி அழைக்கிறது..

உடல் தளர்வு கூட்டி
இமை சோகம் காட்டி
நெஞ்சம் விம்பி கண்ணீர் தெளிக்கும் நீங்கள்..,
நிச்சயம் அது நீங்கள் அல்ல...

உங்கள் நெடுந்தொடர் பாத்திரம்....!