Thursday, 7 November 2013






செடி கொடிகள்
சிதைத்து
பழமரங்கள்
புதைத்து
சிட்டுக்குருவிக்கென
தினம் ஒன்று
கொண்டாடலாம்..

மலர் செடிகள்
மழித்து
பட்டுத்துணிக்கு மட்டும்
கூட்டுப்புழு வளர்த்து
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
என்றும்
தினம் ஒன்று
கொண்டாடலாம்..

விளைநிலம் ஒழித்து
வணிக மனையாக்கி
பசுமை வெளியெங்கும்
கழிவு விசிறி
கட்டாந்தரையாக்கி
கால்நடைகளுக்கும்
தினமொன்று
கொண்டாடலாம்..

விலங்குகள்
பறவைகள்
ஒட்டுமொத்தமாய்

ஒவ்வொன்றின்
வசிப்பிடம் அழித்து
ஒவ்வொன்றுக்கெனவும்
ஒரு தினம்
கொண்டாடலாம்..

பலமுள்ளது
பிழைக்குமென்னும்
பலாத்கார நியதிகள்
கடந்துபோய்

பின்னாளில்

மனித தினம் ஒன்று
கொண்டாடப்படலாம்..
மிச்சமாக ஏதேனும்
மனிதன் இருந்தால்…!

No comments:

Post a Comment