Thursday 7 November 2013






தேங்காய் உடைத்து,
திருநீறு பூசி
திரும்பியதும்,
தெருமுனையில் நின்று
தேநீர் வாங்கித்தர வேண்டுமாய்
கைநீட்டினார் கடவுள்.

தேநீருக்கான
தேவை எனக்கும் இருந்ததால்,
இருவருக்குமாய் சேர்த்து
சொல்லி முடிக்கும் முன்
இடைமறித்த கடவுள்,
”எனக்கு மட்டும்
சர்க்கரை துாக்கலாய் ” என்று
சங்கடமாய் சிரித்தார்.

தேநீர் முடிந்ததும்.
”நெற்றியில் ஏன் சிலுவை குறியீடு”
என்றேன்..

”இன்று போகிற
வீதிகள் அப்படி….
நேற்று கூட
நெற்றியில்
பிறைநிலா போட்டிருந்தேன்”
என்றார்.

தேநீருக்கு நன்றி சொல்லி
தெருவழி
திரும்பினார் கடவுள்.
அவசரமாய்...

காசு கொடுத்து
திரும்பிபோதுதான்
கவனித்தேன்..
தேநீர் கடை
திண்டில் தவறவிட்டிருந்த
கடவுளின்
கதை ஆயுதத்தை...

கண்ணுக்கெட்டிய துாரத்தில்
போகிற கடவுளை
என்ன பெயரிட்டு
அழைப்பதென
யோசித்து முடிக்கும் முன்,

வீதியின் இறுதியிலிருக்கும்
விறகுக்கடை சந்தில்,
நுழைந்து…
காணாமல் போனார்
கடவுள்….!

No comments:

Post a Comment