Thursday, 7 November 2013



பால்ய 
பள்ளிப் பருவத்தின்
ஓவிய வகுப்பறை..

பெயர் எழுதிப்போட்டு
பிடித்த
சீட்டு எடுத்ததில்,

பூங்குன்றனுக்கு,
கிளி ஒன்று
வரையச்சொல்லி வந்தது..

மான் குட்டி
வரையச்சொல்லி
ஆனந்திக்கும்,

நீந்தும் மீன் என்று
எனக்கும் வந்தது..

சிவப்பு பழங்கள்
பச்சையிலைகளின்
நடுவே தொங்க,
கரு நிறக் கிளையில்
அமர்ந்திருந்தது..
பூங்குன்றனின் கிளி..

துாரத்து மலையின்
பின்னனியில்,
மஞ்சள் பூக்கள் ஊடே தெரிந்த,
கிளிப்பச்சை கோடிட்டு வளர்ந்த,
புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.
ஆனந்தியின்
கிளைக்கொம்பு மான்..

நீர் இருக்கிறதென சொல்ல,
வட்டக் குளத்தினுள்,
நீல நிறத்தில்
அலை கோடிட்டு,
துள்ளிக் குதிக்கும்
மீன் ஒன்றை போட்டு,
துணையாய் இருக்கட்டுமென
இன்னும் இரண்டு மீனை
போட்டு வைத்தது..
நான்…

பயண நேரமொன்றில்,
பக்கத்து இருக்கையில்,
பத்துக்கு பத்து வாங்கியதாய்
பெருமையோடு காட்டிய
சிறுமி ஒருவளின்
வரைபட ஏட்டில்..

இரும்புக் கூண்டில்
இறகு உதிர்ந்து
சிறைபட்டிருந்தது.
ஒரு கிளி…

கம்பி வலைகளுக்கு
பின்னால்
கட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஒற்றைக் கொம்பிழந்த
மான்..

கண்ணாடி பெட்டி ஒன்றில்
வண்ணம் பலவாக
மீன்கள் மிதக்க,
காற்றுக் குமிழ்கள்
உமிழும்
கருவியொன்றும்,
கச்சிதமாய்
வரையப்பட்டிருந்தது….

கன நொடியாயினும்.
காட்சி நகலாயினும்.
என்ன..?

இன்று எது என்னுடையதோ,
நாளை அது இன்னொருவருடையது
என்பதெல்லாம்
நிச்சயமாய் இல்லை….!

No comments:

Post a Comment