Saturday, 9 November 2013






ஆசீர்வதிக்கப்படாத
இரவின் உறக்கத்தை,
பலநாள் இந்த வீதியில்
காலடித்தடங்களாக பதிந்திருக்கிறேன்..

நிரந்தரப் பிரிவென்று அறியாத யாருடனோ
விடைபெறுதலுக்குப்பின்,
இந்த வீதியின் எல்லையை
நெடுநேரம் ஏக்கங்களால்
நிறைத்திருக்கிறேன்..

துயருற்று தலைகவிழ்ந்ததொரு
வன் பொழுதில்,
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளால்
இந்த வீதியை மூழ்கடித்திருக்கிறேன்..

அண்டை விட்டிலிருந்து
புறப்பட்ட சவ ஊர்வலத்தில்,
மிச்சமாயிருந்த சொற்களையெல்லாம்,
இறந்துபட்ட பூக்களின் ஊடே வீசியெறிந்து
இவ்வீதியை
அசுத்தமாக்கியிருக்கிறேன்…

அரவமற்று கடந்து போன
மற்றும் பலரை,
அலைகழித்த சிரிப்பொலியால்
மனம் கிழித்து,
இவ்வீதியெங்கும்
திரையிட்டிருக்கிறேன்..

இப்போதும் கூட..

தனிமை தள்ளிவிட்டுப் போன
ஒரு பெரும் பள்ளத்தில்,
நினைவுச்சருகுகளை நிரப்பி
சமதளமாக்கிக் கொண்டிருக்கிறேன்
இவ்வீதியை…!

1 comment:

  1. நினைவுச் சருகுகளை நிரப்பி சமதளமாக்கிக் கொண்டிருக்கிறேன்-- அருமை வரிகள்.... எழுத்துக்கள் இன்னம் பெரிதாக இருந்தால் பரவாயில்லை....

    ReplyDelete