Thursday, 7 November 2013






வலிகள் நிரம்பி,
தளும்பி வழிகிற இந்த
வாழ்கை எனக்கு
வசதியாகவே இருக்கிறது..

வலிகளோடு இருத்தலில்,
வார்த்தை துறவறம்
பூணுகிற உதடுகளுக்கு
பின்னாலிருக்கும் மௌனம்,
சுகமாயிருக்கிறது..

வலிகளுடனான
லயித்தல்களில்,
கண்களில் தெரியும்
மென் சோகம் கூட
கலையழகு என்று என்
கண்ணாடி பிம்பம்
சொல்லிக்கொண்டிருக்கிறது..

வீரனின்
போர்வாள்..

யாசகனின்
பிச்சைப்பாத்திரம்..

ஓவியனின்
துாரிகை..

முடவனின்
ஊன்றுகோல்..

எல்லா உவமைகளும்..
பொருத்தமாகவே இருக்கிறது..
என் வலிகளுக்கு…

புத்தனுக்கான
போதிமரமாய்,
வலிகளின் நிழலில் தான்,
வசப்படுகிறது. என்
வாழ்க்கை ஞானம்…

மூச்சுக்குழலில்
காற்று முட்ட,
இயல்பு மாறி அதிர்வுறும்
இதயத் துடிப்புகளோடு,
எப்போதேனும்
விவரிக்கப்படுகிற என்
வலிகளுக்கு,

தலை கோதியும்,
தோள் சாய்த்தும்,
உங்களில் யாரேனும்
ஒருவரிடமிருந்து
வழங்கப்படும்
வார்த்தை ஆறுதலுக்கு,
ஆயுட்கால அடிமை
ஆகாத வரையிலும்…

வலிகள் நிரம்பி,
தளும்பி வழிகிற இந்த
வாழ்க்கை எனக்கு
வசதியாகத்தான் இருக்கும்…!

1 comment: