Monday, 11 November 2013

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
புன்னகைப்பதில்லை.. 
அல்லது அது 
புன்னகையைப் போலிருப்பதில்லை..!

உடலினும் பெரிதான கோணிப்பை
சுமக்கும் அவர்களிடம்
ஒளிந்திருக்கிறது..!
கோணிப்பையினும் பெரிதான துயரம்..!

பரந்துப்பட்ட குப்பைவெளியில்
கிழிந்த வரைபடங்களையும்
சிதைந்த தெய்வச்சித்திரங்களையும்
கால்களால் விலக்கி
தமக்கான தேசத்தை கண்டெடுக்கிறார்கள்..!

குப்பை பொறுக்கும் சிறுவர்கள்
குப்பை மேடுகளில் உதயமாகிறார்கள்..
குப்பை மேடுகளிலிருந்து அஸ்தமிக்கிறார்கள்..!

புழுதிபடிந்த தம் வெற்றுக் கால்களால்
யாரையோ மவுனமாய் அவமதிக்கிறார்கள்..!

இலக்கற்ற பார்வைகளின் மூலம்
அவர்கள் கடவுளர்களை ஏளனம் செய்து
தலைகுனியச் செய்கிறார்கள்…

”அவசியமற்ற குழந்தை பேறுக்கு
ஆணுறை பயன்படுத்துங்கள்”
உரக்க சப்தமிடும் ஒலிப்பெருக்கியை
உன்னிப்பாய் கவனித்தபடியே
இரவுகளை நோக்கி கடந்து செல்கிறார்கள்..

முன்னிரவுகளில்
காரணமின்றி யாரையோ சபித்தபடி
ஒரு தினத்தை நிறைவு செய்கிறார்கள்..
அல்லது
ஒரு தினத்திற்க்கான சூரியனை
கடலுக்குள் மூழ்கடிக்கிறார்கள்…!
எப்போதாவது
உடன் வரும் நண்பனொருவன்
தொண்டைக்குழி கடித்து
குருதியுறுஞ்சுவான்..!

வாரம் இருமுறை
புதர்களில் வல்லுறவு நிகழ்த்தப்பட்ட
பெண்ணொருத்தி நடுச்சாலையில்
வீசியெறியப்படுவாள்….!

பேரம் படியாத பள்ளிச்சிறுவர்களை
தண்டவாளத்தின் ஓரம்
ஞாயிற்று காலைகளில் சீருடையோடு
கண்டெடுக்கலாம்..!

இரவுக்காவலன்
துருப்பிடித்த கத்தி சுழற்றியபடி
உதடுவழியும் ரத்தத்துளிகளோடு
தினமும் வலம் வருவான்..!

உத்தமச்சாயல் தென்படும்
ஓரிருவரையும்
பகலிரவு பாராது
குரைத்துத்தபடி
துரத்தும் தெருநாய்கள்..!

மாதம் ஒருமுறை
பெரும்பொருள் வேண்டி
ஆதிகாளிக்கு ஆண்மகவு
பலியிட்ட தந்தையொருவன்
புன்னகைத்தபடியே
சிறை செல்வான்…!

மற்றபடி
இந்த வீதியில் ஒருவனாய்
வாழ்வதில் எனக்கொன்றும்
முறையீடல் இல்லை…!
ஒரு நீர்க்குமிழி 
உடையும் சப்தமென 
யாருக்கும் சலனமேற்படுத்தாது
வீதியுலவுகிறார்கள்
மனம் சிதைவுற்றவர்கள்..!

சற்றுமுன்புதான்
எனினும்
கடைசியாய் கவனமேற்றிய
சுயம் தொலைத்த ஒருவரை
உங்களுக்கு நிச்சயம்
நினைவிருக்காது..!

அவர்கள்
தன்னுடல் சுற்றிக்கொண்ட
கோணிப்பைகளின் மூலம்
கருணையற்ற இப்பிராந்தியத்தின்
நிர்வாணத்தை மூடுகிறார்கள்…!

உரத்த குரலில்
யாரையோ ஏசியபடி
பீடுநடை போடும் ஒருவன்
ஆழிப் பிரபஞ்சத்தை
அந்நியமாக்கி கொண்டிருக்கிறான்..!

சிறுதடி கொண்டு
தரை தட்டியபடி பயணிக்கும் ஒருவன்
மிச்சம் ஏதேனும்
மனிதம் இருக்கிறதா என
ஆய்வு செய்பவனாய் இருக்கக்கூடும்..!

எச்சில் ஒழுகியபடி
தேநீர் யாசிக்கும் அவளுக்கு
உலகத்தின் உச்ச வெறுப்பு
கொதிநீர் வடிவில்
பரிசளிக்கப்படுகிறது…!

கையில் எதுவுமின்றி
காற்றில் கிறுக்குபவன்
கடவுளுக்கு கடிதம்
எழுத எத்தனிப்பவன் போலும்…!

பொருள் வேட்கையின்
வெம்மை மிகுந்ததொரு வன்பொழுதில்..

இலக்கின்றி நகர்கிற
மனம் புரண்ட ஒருவன் மீது
துரோகித்த ஒரு தோழன்
சாயல் தென்படுகையில்

நீர்க்குமிழி உடையும் சப்தம்
உங்கள் காதுகளுக்கு மட்டும் எட்டி
சலனமேற்படுத்த துவங்குகிறது...!
அலைபேசிகளின்
அரூப சுழற்சியில் 
பயணித்துக் கொண்டிருக்கிறது
நீதியற்ற இந்த வாழ்க்கை…!

மனிதர்கள் இணைத்து
மனிதம் துண்டிக்கிறது
அலைபேசியின் அலைவரிசைகள்..!

ஒரு அழைப்பின் வழியே
அகன்ற நிலநடுக்கம் அனுப்பலாம்..!

ஒரு அழைப்பின் வழியே
இரவாத பெருமகிழ்வு பரிசளிக்கலாம்..!

அறிவிப்பற்ற துண்டித்தலின் மூலம்
எதிர்முனையை நிராகரிக்கலாம்..!
அதன் பொருட்டே அம்முனைக்கு
பெருவலி அளிக்கலாம்..!

தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் ஒருவர்
உங்கள் நினைவு எல்லையை
ஆக்கிரமிக்கலாம்..!

ஒரு குறுஞ்செய்தியின் வழியே
எவருக்கேனும் திசை காட்டலாம்..!

ஒரு சொட்டும் வியர்க்காது
நெடுநேரம் விரல்களால்
விளையாடலாம்..!

ஊழி பாவம் கழிதல் வேண்டின்
அலைபேசும் எண் மாற்றி
கணநேரத்தில் புனிதனாகலாம்..!

இயன்றால்..
மொத்த இயக்கமும் நிறுத்தி
சட்டை பற்றியிழுக்கும்
பக்கத்து இருக்கை மழலையோடு
கைகுலுக்கியும் உறவாடலாம்…!

Sunday, 10 November 2013





ஆதித்தொழில் செய்யும்
வேசி என்றழைப்பவர்களில்,
பாதிக்கும் மேல்
உன்னுடன் படுக்கையினை
பகிர்ந்து கொண்டவர்கள் என்பதறிவாய்..

ஒவ்வொரு தீண்டலுக்கும்
மலர்பவள் நீ.
ஒரே முறை மலரும்
பூச்சூடிக்கெள்வாய்..

விருந்துக்கு அழைக்கும்
உன் உதட்டுச்சாயம்
இறுதியினை எட்டிக்கொண்டிருக்கும் உன்
ஒரு சொட்டு உதிரத்தினால் ஆனது..

உன் போல்
அதீத அலங்காரங்களால் நிறைத்துக்கொள்ளும்
இச்செவ்வானமும்
உன் போல்
பின்னிரவுகளில் இருளடைந்து விடுகிறது..

தயக்கம் ஏதுமின்றி
நீ ஆடைகள் களைவதற்க்கு,
முதலில் நாணம் களைவது
என்பதுதான் அடிப்படை.

சிதைவு முடிந்து,
சிதைந்த மலர்கள் உதறி,
இன்னொரு சிதைவுக்கு
உன்னை புதுப்பிக்க
வீதியோரத்து ஒற்றைக்கோப்பை
தேநீர் போதுமாயிருக்கிறது…

புறக்காமம் தொலைத்து,
உயிர்க்காமத்து வெளியில்
உன் உணர்வுப்பூட்டுத் திறந்து
உச்சமெட்டும் ஒரு நன்னாளில்
அரைகுறை ஆடை மறந்து
ஆழ்ந்துறங்குவாய்…

புரளும்போது இடறிவிடும்
உன் இடதுகாலால்
தற்செயலாய் உலகினைத் தள்ளிவிடுவாய்..

அந்நாளில்
சுற்றுப்பாதை விலகி
சூரியனை முத்தமிட்டு
செத்தொழியும் இப்பூமி...!

















அந்த அறை உங்களுக்கானது..

எந்த அறைகளின் சாயலுமின்றி
பிரத்தியோகமாக
உங்களுக்கென உருவாக்கப்பட்டது…

உங்களுக்கான அறை
கதவுகளற்றது..
அதனால் பூட்டுதலும்
திறவுகோல் பாதுகாத்தலும்
அவசியமற்றது..

உங்களையன்றி யாருக்கும்
புலப்படாத அறையென்பதால்
நாற்புறத்து சுவர்களற்றது அந்த அறை..

எல்லா வழிகளிலும்
நீங்கள் நுழைய வேண்டியிருப்பதால்
வாசல்களென்று எதுவுமற்றது உங்கள் அறை..

உங்கள் அனுமதியின்றி
ஒளியும் காற்றும் வருவதில்லை என்பதால்
சாரளரங்களும் அவசியமற்றவை..

சம அளவில் சலவைக்கற்களாலும்
சிலந்தி வலைகளாலும்
சூழப்பட்டது உங்கள் அறை..

உங்கள் அறையின்
அலங்கார மலர்களிடமிருந்து
துர்நாற்றம் துயில்கிறது..

அவ்வப்போது
கழற்றி வைக்கப்பட்டிருக்கும் முகமூடிகள்
நறுமணத்தை உற்பத்தி செய்கின்றன..

கழிவு நீர் வழிந்தோடும்
உங்கள் அறையில்
இறுக்கமான உதடுகளும்
இலக்கற்ற வசவுச்சொற்களும்
மிதந்து கொண்டிருக்கின்றது..

வரவேற்பறையில் கிடத்தப்பட்டிருக்கும்
பரிசுப்பொருட்களுக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது
ஏராளமான உயிர்க்கொல்லி ஆயுதங்கள்..

உங்கள் அறையின்
ஒழுங்கற்றத் தன்மையில் மனச்சிதைவுற்று
ஆசுவாசம் கொள்வதற்கென
அதிகம் திறக்கப்படாததொரு
கடவுளுக்கான பகுதியில் நுழைகிறீர்கள்..

அங்கே…
புகைப்படமாய் அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு மழலையின் சிரிப்பு..!




நட்பு -1

ஏழாவது தளத்திற்க்கு

ஏறிக்கொண்டிருக்கிறேன்..

உரையாடலோடு உடன் வரும் நண்பன்

படிக்கட்டுக்களின் எண்ணிக்கையை

பாதியாக்குகிறான்…!


நட்பு -2


நண்பர்கள் யாருமற்று

தேநீர் அருந்தும்

அனாதைப் பொழுதுகளில்

தற்காலிகமாக

தேநீருடன் நட்பாகிறேன்..

புது நண்பனும் சுவையூட்டுகிறான்...!


நட்பு -3

எது வேண்டுமென அன்னைக்கும்,
எது வேண்டாமென தந்தைக்கும்,
தெரிந்திருக்கிறது..!

எப்போது எது வேண்டுமென்றும்
எப்போது எது வேண்டாமென்றும்
நண்பனுக்கு தெரிந்திருக்கிறது…!.


நட்பு -4

திரைகடலோடி

திரவியம் தேடிய நண்பன்

திரும்பியதும்,

முதலில்

தெருத்தெருவாய் ஓடி

நண்பர்களைத் தேடுகிறான்…!


நட்பு -5

நண்பர்கள் நீருற்றுகிறார்கள்..

நண்பர்கள் உரமிடுகிறார்கள்..

நண்பர்கள் களையெடுக்கிறார்கள்..

உலகெங்கும் செழித்து வளர்கிறது

காதல் பயிர்கள்..!


நட்பு -6

காந்தத்திற்க்கு
எதிரெதிர் துருவம்..

காதலுக்கு
இணையான துருவம்..

நட்புக்கு மட்டும்
எல்லா துருவங்களும்..!

நட்பு -7

சட்டை முனையில்

மடித்து வைத்து

மிட்டாய் கடித்து

பங்கிட்டதிலிருந்து துவங்கி

பகிர்ந்து கொள்வதிலெல்லாம்

சுவையளிக்கிறது நட்பு…!


நட்பு -8


ஒரு நட்பு

அறிமுகமாகிற கணத்தில்

உங்களுக்கு

ஒரு உலகமும்

அறிமுகமாகிறது….!



நட்பு -9


இலைகள் மூடிய

நிழல்மரமாய்

இளைப்பாறுதல் அளித்து

இளைப்பாறல் முடிந்து

வழியெங்கும்

இணைபிரியாத் துணையென

உடன் பயணிக்கிறது நட்பு…


நட்பு -10


இரு விரல் நீட்டி

ஒன்றினைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும்

ஒவ்வொரு நட்பும்

ஒன்றில் நல்லதும்

மற்றொன்றில் மிக நல்லதுமென

எதையோ ஒளித்து வைத்திருக்கிறது..!



நட்பு -11


கடவுள்

உருவமில்லா நம்பிக்கை…!

நட்பு

உருவங்களில்

உலவும் நம்பிக்கை….!


நட்பு -12


நிறைகுடம் அல்ல.

குறைகுடமும் அல்ல.

அன்பை இறைத்து ஊற்றி

நிறைக்கும் குடம்..

நட்பு…!
வென்றவனுக்கும்,
தோற்றவனுக்கும்,
வீர வரலாற்றுக் கல்வெட்டு..!

களத்தில் இறங்கி 
கத்தியெடுத்து வீசியவர்களுக்கு,
ஒரு கரித்துண்டு கிறுக்கல் கூட இல்லை…!
அவநம்பிக்கையை அடித்தளமிட்டு,
ஆகப்பெரும் வேகத்தோடு
எழுப்பிக்கொண்டிருக்கிறாய்..!
உன் சுவர்களை..

சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்வதன் மூலம்,
சுதந்திரமடைந்து விடுவதாக
எண்ணிக்கொள்கிறாய்..

நிர்மாணிக்கப்பட்ட சுவர்களால்,
நிச்சயிக்கப்படும் வெற்றிடத்தை,
நீ அறியாதிருக்கிறாய்..
அல்லது,
அறிந்ததும் அலட்சியமாயிருக்கிறாய்..

எதிரானவர்களுக்கு
எதிர்வினையாற்றாது,
சுவர் மூடிக்கொள்வதன் மூலம்,
எதிர்வினையை
உன்மீதே திருப்பிக்கொள்கிறாய்..

அடைக்கப்பட்ட சுவர்களின் மீது,
அமைக்கப்பட்ட தற்செயல் சாரளங்களை
பிறழ்மனத்தின் கைகொண்டு
கதவடைத்துவிடுகிறாய்…

நாற்புறமும்
கட்டிமுடிக்கப்பெற்ற
உனக்கான சுவர்களால்,
உலகத்தை துண்டித்துவிட்டதாக
பெருமகிழ்வு கொள்கிறாய்..

உன்னைத் துண்டித்துவிட்ட
எந்தச்சலனமும் அன்றி
இயல்பாகவே இயங்குகிறது
எல்லோருக்குமான உலகம்….!

களவாடப்படும் முன்
கடைசி ஆசை எதுவென்று
அரசலாற்று மணலிடம்
அரை மனதோடு கேட்கப்பட்டது..

இறுதியாய் ஒருமுறை
தாவணிப்பெண்கள்
தன்மீது பாண்டியாட வேண்டுமென
தண்ணீர் மல்க கேட்டது மணல்..

தாவணிப்பெண்கள்
வேற்றுடைக்கு மாறி
சடுகுடு விளையாட
துாரதேசம் போயிருப்பதாய்ச் சொல்லி,

கடைசி ஆசை
கண்ணியமாக மறுக்கப்பட்டு
மரணமளிக்கப்பட்டது மணலுக்கு..

ஆறும்,
கடற்கரையுமற்ற
அனாதை நகரமொன்றில்,

வீடுகட்டுவதற்கென
வீதியில் கொட்டப்பட்ட மணற்குவியலில்,
தெருவோரச் சிறுமிகள்
வீடுகட்டி விளையாடி
குதித்து சறுக்கி மகிழ்ந்ததும்

மீண்டு, உயிர்த்தெழுந்து,
மீண்டும் கண்மூடியது அம்மணல்..





யுத்தக் களத்திலிருந்து
வருகிறேன்..

அங்கே
ஒரு இணைப்பறவை இறந்து கிடந்தது..
இன்னொரு பறவை
இரைதேடிக் கொண்டிருந்தது..

இரு கைகளற்ற
உடலொன்றின்
இருகால்கள்
நீர் தேடி நகர்ந்து கொண்டிருந்தது..

உடைகள் அவசியமற்ற
நிர்வாண உடல்கள்
தரைபரப்பி
கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது..

வேரில் அமிலமூற்றப்பட்ட
மரமொன்று
இலைகளோடு சேர்த்து
கிளைகளையும் உதிர்த்து
கீழ்விழக் காத்திருந்தது…

உறுப்புகள் வீசியெறியப்பட்ட
ஆழ்கிணற்றிலிருந்து
மெல்ல மெல்ல
உயர்ந்தெழுந்தது குருதி ஊற்று..


நான்
யுத்தக் களத்திலிருந்து வருகிறேன்..

எதை எதை இழந்தேன் என்று
எண்ணிப்பார்க்க நேரமில்லை…

கருப்பையினுள் ஓர் உயிரோடு
வாயிலில் கிடத்தியிருக்கிறேன்
என் மனைவியை..

வயிற்றுக்கு உணவிடுங்கள்..

என்றேனும் யாம் போரிட வேண்டுமெனில்
எங்கள் வயிற்றுக்கு
இன்றேனும் நீங்கள் சோறிடவேண்டும்..!.
கடந்து போகிறவர்களெல்லாம்
கன்னத்தில் போட்டு நகர்ந்தபோதும்,

பன்னீர் தெளித்து பாலாபிஷேகம் 
நிகழ்த்திய போதும்,

அகல்விளக்கு திரி உயர்ந்து
புறவெளிச்சம் பரவியபோதும்,

அலங்கரித்து மாலையிட்டபோதும்,
ஆதியோடந்தமாய் தீபம் காட்டியபோதும்,

பெருவொலி எழுப்பி தேங்காயுடைத்த போதும்,
சிறுமணியடித்து சரணம் போற்றிய போதும்,

அசைவற்று மௌனம் காத்த
தெருவோரத்து அம்மன்..

நெடுஞ்சாலை அதிகாரிகள் புடைசூழ
வலிய எந்திரத்தோடு உடைத்து
ஆக்கிரமிப்பு என அகற்றியபோதும்
அசைவற்று அதே மௌனம்
காத்துக்கொண்டிருக்கிறாள்…

Saturday, 9 November 2013






மூன்றாம் தலைமுறையில்
கோசலையாயிருந்து,
தலைநரை எட்டியிருக்கும்
தந்தையின் காலத்தில்
கோசலையம்மாளாக இருந்தவள்..
எங்களுக்கு
கோசலைப் பாட்டியாயிருக்கிறாள்..

இறுதி வரையிலும்,
புகைப்படம் எதற்க்கும்
முகம் காட்டியதில்லை அவள்..

அபூர்வமாய்
அக்காவின் திருமணத்தில்
மெத்தப்பயந்து, முகம் வெளிறி,
சுவர் வெறித்து நின்ற

கோசலையப்பாட்டியை,

தோள் வரையில் சதுரமாய் வெட்டி,
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கூட்டி,
கண்களில் கசியும் நீர்
காட்சி பிம்பத்தை அசைக்க,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்கு
காணிக்கை கொடுத்திருக்கிறேன்…

சாயுங்காலத்திற்கெல்லாம்
தன் முகம் ஊர் முழுக்க பிரபல்யமாகும்
எனத்தெரிந்தால்,

கோசலைப்பாட்டி
முகத்தை துாக்கி வைத்துக்கொண்டு,
குறைந்தது மூன்று நாளைக்காவது
பட்டினியோடு பேசாமல்
படுக்கையில் கிடப்பாள்..!





ஆசீர்வதிக்கப்படாத
இரவின் உறக்கத்தை,
பலநாள் இந்த வீதியில்
காலடித்தடங்களாக பதிந்திருக்கிறேன்..

நிரந்தரப் பிரிவென்று அறியாத யாருடனோ
விடைபெறுதலுக்குப்பின்,
இந்த வீதியின் எல்லையை
நெடுநேரம் ஏக்கங்களால்
நிறைத்திருக்கிறேன்..

துயருற்று தலைகவிழ்ந்ததொரு
வன் பொழுதில்,
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளால்
இந்த வீதியை மூழ்கடித்திருக்கிறேன்..

அண்டை விட்டிலிருந்து
புறப்பட்ட சவ ஊர்வலத்தில்,
மிச்சமாயிருந்த சொற்களையெல்லாம்,
இறந்துபட்ட பூக்களின் ஊடே வீசியெறிந்து
இவ்வீதியை
அசுத்தமாக்கியிருக்கிறேன்…

அரவமற்று கடந்து போன
மற்றும் பலரை,
அலைகழித்த சிரிப்பொலியால்
மனம் கிழித்து,
இவ்வீதியெங்கும்
திரையிட்டிருக்கிறேன்..

இப்போதும் கூட..

தனிமை தள்ளிவிட்டுப் போன
ஒரு பெரும் பள்ளத்தில்,
நினைவுச்சருகுகளை நிரப்பி
சமதளமாக்கிக் கொண்டிருக்கிறேன்
இவ்வீதியை…!





ஒரு தினம் அரசனாயிருக்க
ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அறிந்திராத அணிகலனும்
கேள்வியுறாத மேலாடையுமென
துவங்கியது நகர வீதியுலா..

தெருவோரத்து புல்வெளியில்,
தேகத்தில் ஆடையற்றுக் கிடந்த
சிறுவனுக்கு,
தேரிலிருந்து இறங்கி,தெருவில் நடந்து,
மேலாடை கழட்டி
மேனி மூடிப் போகிறேன்..

தகுதியற்ற செயல் இதுவென்று
தலையிலிருந்த கிரீடம்
பறிக்கப்பட்டது…

பிறிதொருநாள்
யாசகனாயிருக்க ஆசீர்வதிக்கப்பட்டேன்..

அவலட்சண ஆடையணிந்து,
அலைந்த உடல் மடிந்து,
வீதியெங்கும் கால் அலைந்து,
அகண்ற பாத்திரம் நிறைத்த உணவை,

வயிறு சுருங்கி, விழி இடுங்கி,
வழியில் நின்ற சிறுமிக்கு
பாதியென்று பகிர்ந்தேன்..

தகுதிக்கு மீறிய செயல் இதுவென்று
அகண்ட பாத்திரம் பிடுங்கப்பட்டு,

அதனினும் சிறிதாய்
உடைந்த பாத்திரம் ஒன்று கொடுக்கப்பட்டது….

வேறொரு தினம்
கடவுளாயிருக்க ஆசீர்வதிக்கப்படும்
நாளுக்கென காத்திருக்கிறேன்..!







**விரிவாக்கப்பட்ட தொழில் நகரம்**


சலவைக்கற்களால்
சதுரவெளியாக்கப்பட்டிருந்த
இந்த அறை,
சீரற்ற புல்வெளிகளால் நிறைந்திருந்தது..

குளிரசாதனப் பெட்டி
பொருத்தப்பட்டிருக்கும்
இந்த வலப்பக்கச் சுவற்றில்,
வேப்பமரம் ஒன்று
காற்றை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தது..

கொடுமுகம் காட்டி
பணியாளன் ஒருவனை தண்டித்த
இந்த எதிர் இருக்கையில்,
ஓநாயொன்று சிறுமுயலை
வேட்டையாடிக் கொண்டிருந்தது…

உணவு புசித்து
உடற்பசியாறிய
இந்த ஜன்னலோர மேசையில்,
வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு
இறுதியாய் புணர்ந்து கொண்டிருந்தன..

அனுமதியோடு உள் நுழையச் சொன்ன
இந்த அலுமினியக் கதவில்,
ஆடு மேய்க்கும் சிறுமி ஒருவள்
பூப்பெய்தியிருந்தாள்…

அண்டத்தின் ஒலிலைகள் அடங்கி,
நிசப்தம் நிறையப் பெற்ற முன்னிரவில்,

அலுவலகத்து அலங்கார மேசையில்
அரைபாகம் நீர் நிரப்பப்பெற்ற
கண்ணாடிக் குடுவையில்,

முக்காலடியினும் கீழ் வளர்ந்த
மூங்கில்மர சிற்றிலையின்
அனல் கக்கும் கேள்விகளுக்கு,
பதிலேதுமின்றி கைகட்டி
அமைதியாயிருக்கிறேன்…!
ஓங்கியொலிக்கப்பெற்ற
ஒற்றை வார்த்தையில் துவங்கியது.
ஒரு கலவரம்..

அம்முனையில் 
பெருங்கோபம் நெய்யப்பட்ட
உரத்தக் குரலின்று கிடைக்கப் பெற்றது
ஓர் அதிகார ஆணை..

தலைக்குமேல் உயர்த்தப்பட்ட
தடி பொருத்தப்பட்ட கைகளின்
எண்ணிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை…

முதலில் நின்றவர்களுக்கே முன்னுரிமை.
அடி வாங்குவதில்..

நிகழ்வினைத் தாமதமாக உணரும்
இரண்டாம் வரிசைக்காரர்களுக்கு
பளபளக்கும் காலணியால்
வேறொரு வைத்தியம் நிகழ்த்தப்பட்டது..

தெருவோர சிறுகற்களும்
இறுகிப்போன கரங்களும் அன்றி
ஆயுதம் வேறொன்றுமில்லை.
இம்முனை எதிர்ப்பாளர்களுக்கு..

மனவுறுதியின் அளவீடற்ற எல்லைகளை
எளிதில் கடந்துவிடுகிறது.
ஆணவத்தால் நிகழ்த்தப்படுகிற
ஆயுத ஆணை..

சகலத்துயரமும் நிகழ்த்தி முடிப்பெற்ற
சூன்யப் பொழுதில்,

உரிமை வேண்டுமென கோரப்பட்ட
பதாகையொன்றில் உறைந்துகிடக்கும்
தோற்கடிக்கப்பட்டவனின் குருதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது..
ஆயிரமாண்டுகளின் வெப்பம்….!
எல்லா தருணங்களிலும்
யாரேனும்,
எதைக்கொண்டோ,
நிரப்பிவிட்டுப் போகிறார்கள்..
என் பாத்திரத்தை..

ஒரு முறை
மழலையின் சிரிப்பொன்று,
என் பாத்திரத்தில்
ஆனந்தத்தை நிரப்பிவிட்டுப் போனது..

வேறொருநாள்,
ஒரு பெண்ணின் கண்ணீர்,
என் பாத்திரத்தில்
துயரத்தை நிரப்பிவிட்டுப் போனது..

பிறகு
ஒரு உழைப்பாளியின் வியர்வை,
என் பத்திரத்தில்
உறக்கத்தை நிரப்பிவிட்டுப் போனது..

மற்றொருநாள்
ஒரு பறவையின் எச்சம்,
என் பாத்திரத்தில்
பசுமையை நிரப்பிவிட்டுப் போனது..

நேற்றைய விடியலில்,
கடந்துபோன ஒரு தேனீ,
என் பாத்திரத்தில்
மகரந்தத்தை நிரப்பிச்சென்றது..

இப்போதும்கூட..
மவுனமும், மேகமும் போர்த்திய
இந்த நிலவு,
வெறுமையை நிரப்பிக் கொண்டிருக்கிறது..
என் பாத்திரத்தில்…!

ஒரு கவிதைக்கான
முதல் வார்த்தையை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்..

தரையிலிருந்து மேலெழும்பிய
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்,

பெருநீர்ப் பரப்பில்,
மென்வயிறு உரச
சிறகடித்து பறந்ததொரு
பறவையினையும்,

வெற்று காகிதத்தில்
நீள் நாக்கு துழாவி,
மிச்சமிருக்கும் உணவைத் தேடும்
இளைத்த பசுவினையும்,

பயண ஜன்னலுக்கு வெளியே,
இறந்து போன பூச்சரம்
வீசிய வளையல் கரத்தையும்,

நிராகரிக்கப்பட்டு,
தலைகவிழ்ந்து
மௌனமாய் திரும்பும் யாசகனையும்,

அடம்பிடித்து அழும் மழலையை,
ஆவின் பாலுடன் ஆற்றுப்படுத்தும்
தந்தையினையும்,

கடந்து வந்துவிட்ட
இந்த இரவில்,

ஒரு கவிதையின்
கடைசி வார்த்தைக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
அகல நீளமெல்லாம்
அவரவர் வசதிகளுக்கு உட்பட்டது..
ஆயினும்
எல்லோருடைய மீன் தொட்டிகளும்
எல்லா பக்கத்திலும் 

அடைக்கப் பட்டிருக்கிறது..

நிர்ணயிக்கப்பட்ட துாரம் வரை நீந்தி
பின் திரும்பி…
பின் நீந்தி..
ஒரு ஊசலின் 

விசையினைப் போலிருக்கிறது.
உள்ளிருக்கும் மீன்களின் வாழ்க்கை..

பாறை படர்ந்த பாசிகளை தின்று,
புழு கோர்த்த துாண்டிலில் அறிவற்று
அகப்பட்டுக் கொள்வதை மறந்து,
அவ்வப்போது துவப்படும் கடுகளவு
உணவு துாற்றலுக்கு காத்திருக்க
கற்றுக் கொண்டிருக்கிறது அம்மீன்கள்…

உள்ளீடப்பெற்ற எந்திரம் உமிழும்
நீர்க்குமிழ்களில் அவைகளுக்கு எந்த
உயிர்க்காற்றும் கிடைப்பதில்லை..

செயற்கை செடிகளின்
அச்சிடப்பட்ட பச்சை வர்ணங்கள்
அவைகளுக்கு மூச்சுமுட்டுவதை
எவரும் அறிவதில்லை..

கண்ணாடித் தொட்டிலிருக்கும்
வண்ண மீன்களுக்கு
இரவின் இருள் என்பது
எப்போதோ நினைவிலிருந்து
அகற்றப் பட்டுவிட்டது..

உள்ளிருக்கும் எல்லா மீன்களும்
தண்ணீரில் நீந்திக் கொண்டிருப்பதாக
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..


உங்கள் சுயநலத்தில்
நீந்திக் கொண்டிருப்பதாக
அவைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன…!