Friday, 8 November 2013



யாரையும்
அன்புடன்
அழைத்ததாக தெரியவில்லை..

இடையில்
நெகிழும்
உடையோடு
எந்த நடிகையும்
குத்துவிளக்கேற்றி
முதல் விற்பனை
துவங்கியதாக
தெரியவில்லை…

குறையிருந்தால்
எங்களிடமும்
நிறையிருந்தால்
நண்பர்களிடமும்
சொல்ல அறிவுறுத்துகிற
வாசகம்
ஏதுமில்லை.

சேவை
சரியில்லை என்று
சேவகனிடம்
வாடிக்கையாளர்
யாரும்
சண்டையிட்டதாக
தெரியவில்லை..

விளையாட்டு
போட்டி நிதி,
கட்சிகளுக்கான
வளர்ச்சி நிதி,
யாரும்
வசூலித்ததாக
தெரியவில்லை..

கை நுழைய மட்டும்
அரையடி இடத்திற்கு
இடைவெளி விட்டு
கம்பி வளை
முகப்பில்
மூடப்பட்ட
மதுபானக்கடையில்...

குறைந்த பட்சம்
நன்றி..
மீண்டும் வருக
என்று கூட
பெயர் பலகையில்லை…!





இலைகளால்
கண்ணீர் துடைத்து,
மெதுவாய் தயங்கி,
விசும்பும் குரலில்
கடவுளிடம்
மன்னிப்பு கேட்கிறாள்.
ஏவாள்..

பின்வாசல் வழியே
உள்ளே நுழைந்து,
”மன்னிப்புக் கேட்க ஒன்றுமில்லை,
நன்றி வேண்டுமானால்
பெற்றுக்கொள்ளுங்கள்”
மெல்லிய கிறக்கத்துடன்
கடவுளிடம் சொல்லிவிட்டு
பதிலுக்கு காத்திராமல்
நகர்ந்துவிடுகிறான்.
ஆதாம்..

எல்லா பழங்களும்
விஷமாகிவிட்ட
ஆப்பிள் மரக்கிளையில்
கடவுளிடம் பரிசு பெறும்
கனவோடு அயர்ந்துறங்கி
ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது
பாம்பு..

மௌனமாய்
புன்னகைக்கிறார்
கடவுள்..

திட்டமிட்டது..
திட்டமிட்டபடியே நடக்கிறது…




பள்ளியெழுச்சி
பாடலோடு
துயில் எழுவீர்..

அபிஷேகம்
அலங்காரம் முடிந்து,
பக்தி பெருக்கோடு வந்த
பக்தர்களுக்கு
தரிசனம் தருவீர்..

உச்சகால பூசைக்கு பின்
ஓய்வு..

முடித்து..

பால்,தேன்,
பஞ்சாமிர்தம்,
இன்னபிற
அபிஷேங்களுக்கு பிறகு
திவ்ய ரூபத்தில்
காட்சியளிப்பீர்..

அமுத படையலோடு
அர்த்தஜாம பூஜை முடித்து
ஆனந்த சயனத்திற்கு
போகும் முன்.
உணவு செரிக்க
பிரகாரத்திற்குள்
நடந்து செல்வீர்..

குறைந்த பட்சம்,
கோபுரத்துக்கு வெளியிலும்
வந்தால்...

வாசலுக்கு அருகே
வயிறு சுருண்டு,
உடல் நீட்டி,

பாத்திரத்திற்க்கு
பக்கத்திலயே
படுத்திருக்கும்
யாசகனுக்கு,

அதிகம் வேண்டாம்..
ஐந்து ரூபாய்
போட்டுச் செல்லுங்கள்..
பரம்பொருளே...

காலையில்
உங்களுடனே
பள்ளியெழுச்சி
பாடல் கேட்டு
விழித்தெழுபவன்,

பாத்திரத்தில் கிடந்த
ரூபாய் கொடுத்து,

தள்ளி நின்று,
விரல்கள் தீண்டாமல்
காகித கோப்பையில்
கொடுக்கப்படும்
தேநீர் குடித்து விட்டு..

உற்சாகமாய்
பிச்சையெடுக்க போகலாம்….
இந்த நாள்
இனிதாகும்..








சாரங்கபாணி என்றுதான்
பெயர்.
தமிழாசிரியர் ஆனதும்
தமிழ்மணி ஆனார்..!

சாயங்கால சூரியனுக்கு
சாயம் போனதாய்
மஞ்சள் நிற சட்டை..

கறை கழுவி
சலவை செய்த நிலவென
வெள்ளையில் வேட்டி..

நெடுங்காலம்
நினைவுக்குள் அகலாத
அவரது நிரந்தர அடையாளம்..

தானமும் கர்ணனும்,
என ஒப்புமையிட்டால்
தமிழ்மணியும் வேட்டியும்,
என உவமையிடலாம்..

வேட்டி கட்டியவன்
வேடிக்கைத்தமிழன் என
வீண் கருத்து சொல்பவர்களை,
வேண்டாத தமிழன் என்பவர்..

யாரும் எதிர்பாராது
ஒருநாள்
சட்டென நிகழ்ந்தது
அவரது விருப்ப ஓய்வு..

மகள்களுக்கு திருமணம்,
மகனுக்கு வேலைவாய்ப்பு என
சேமித்த செல்வமெல்லாம்
செலவாகிப்போனதில்,
செல்வராயிருந்தவர்
செல்லாதவரானார்…

ரத்த சொந்தங்கள் எல்லாம்
ரத்தம் குடிக்கும் பூச்சியாய்
சொத்து முழுதும் உறிஞ்சிவிட,

தமிழ்மணியிடம்
மிச்சமிருந்தது..,
வாழ்க்கை கொடுத்த தமிழும்,
வாழ்க்கை கெடுத்த வறுமையும்..

பின்னொரு நாளில்,..

நகரத்து வீதியில்
நகராத கூட்டமிருக்கும்
நகைக்கடை ஒன்றில்
இரவுக்காவல் வேலையொன்று
இருப்பதாக காதுக்கு
கசிந்தது ஒரு தகவல்…

விடியும் வரை
உறங்காமலிருப்பது
அடிப்படை தகுதி

நல்லது..
வறுமைக்கு பிறகு
வளமையோடு சேர்த்து
தொலைந்துபோன உறக்கம்
வசதியாயிருந்தது...

அடுத்த தகுதிதான்
அச்சமூட்டியது.

கணுக்கால் வரையிலான
கால்சட்டை அவருக்கு
கட்டாய சீருடை என்பது
தங்கச்சிலையின் தலைக்கு
தகரத்து கிரீடமாய்
ஒட்டாத உறுத்தலாயிருந்தது…

”போகும்” வரை வேட்டி
என்றிருந்தவர்
பொருளாதார நிலை
புறந்தள்ளியதில்
மாறினார்..

ஒரு வாரம்
மட்டும்
ஓடியிருக்கும் அவரது
இரவுக்காவல் காலம்..

நிலவு துாங்கியெழுந்த
ஒரு முன்னிரவில்,

நிச்சயிக்கப்பட்ட மரணத்தை
நீட்டிக்க விரும்பாது
சட்டென கட்டிக்கொண்டார்…
வீட்டிற்க்கு வரும் விருந்தாளியை
வீதிக்கே சென்றழைக்கும்
விருந்தோம்பும் பண்பு அது.…

துாக்கில் தொங்கினார் தமிழ்மணி..
துாக்கு கயிறாய் தொங்கியது
அவரது வேட்டி…!


எளிதாய் கிடைப்பதால் 
நட்பின் இறைநிலை அறியாத
தலைமுறை எச்சம் நான்...!

காதல் பற்றி எழுதி 

காதலிக்கு காட்டிய நான்
நட்பு பற்றி எழுதி 

நண்பர்களிடம் கூட காட்டியதில்லை.

காத்திருக்க வைத்ததற்கு
மன்னிக்க சொல்லி
காதலியிடம் மண்டியிட்ட 

கெஞ்சல் கணங்களில் எல்லாம்
நட்புக்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி
குற்றம் செய்திருக்கிறேன்...!

நானே மறந்த என் பிறந்த நாளுக்கு
நள்ளிரவு வாழ்த்து சொன்ன ,
யாருடைய பிறந்த நாளும்
எனக்கு நினைவிருந்தது இல்லை..

காதல் நொறுக்கிய காலங்களில்,
மதுக்கோப்பை நீட்டாது,
தேநீர் கோப்பை திணித்து
தெளிவு தந்தது நட்பு..

நிலையிழந்த காலங்களில் மகுடமும்,
சிறகிழந்த காலங்களில் இறகும் தந்தது நட்பு..

நினைவு தெரிந்த நாள் முதலான நட்புக்கு
நினைவுக்கு தெரிந்து எதுவும் செய்ததில்லை நான்..

ஏதேனும் ஒரு காரணம் காட்டி
எப்படியேனும் கேட்கவேண்டும்
குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு..

அதற்கும் கூட..


”நமக்குள் என்ன மன்னிப்பு..?
மன்னிப்பு கேட்டதற்காக மன்னிப்பு கேள் ”
என்றுகூட கோபிக்கலாம்

அந்த உயரிய நட்பு....!


சற்று முன் வரை 
உயிரோடிருந்த ஓர் அணில்..

ஒரு துணை தேடி 
துள்ளித் திரிந்திருக்கலாம்.

இரைதேடி 

பசியோடு அலைந்திருக்கலாம்..

வசிப்பிடம் ஒன்றின்
வழி தேடியிருக்கலாம்...

விசாரணைக்கு உட்படாதொரு
ஒருதலைபட்ச விபத்தின் 

காரணகர்த்தா நான்..!

குருதிபடிந்த முன்சக்கரம்
கழுவி முடிக்கையில்,
குருதியிழந்த அணில் நினைவும்
கழுவப்பட்டுவிட்டது..

பின்னொரு நாளில்,
பெருந்துயர் காலத்தில்,
பாவமென்ன செய்தோமென
பட்டியலெடுத்து நிரடுகையில்

நிச்சயம் இச்சம்பவம்
நினைவுக்கு வராமல் போகும்...!










ஒரு தொலைக்காட்சித் தொடரின்
எழுத்துருக்களோடு துவங்குகிறது,
தரைதளத்திற்கு சற்று மேலான
உங்கள் பயணம்..


உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு பாத்திரம்
உங்களையும் தேர்ந்தெடுக்கிறது..

துயரப்படுகிற உங்கள் பாத்திரத்திற்கு
அனுதாபப்படுகிறீர்கள்..

அலைக்கழிக்கப்படுகிற உங்கள் பாத்திரத்திற்கு
ஆத்திரமுறுகிறீர்கள்...

உங்கள் பாத்திரத்திற்கான கண்ணீர் உங்கள்
கன்னத்தின் வழியோடி
உதடுகளில் உப்புக்கரிக்கிறது..

இடைமறிக்கிற இடைவேளை
வர்த்தக விளம்பரங்களை உங்கள்
வசவுகளால் நிறைத்துவிடுகிறீர்கள்...

இக்கட்டானதொரு சூழலில்
இடறி விழும் உன் பாத்திர தருணங்களில்
”தொடரும்” என முடிக்கும் தொலைக்காட்சிக்கு
துர்மரணம் நிகழ சபிக்கிறீர்கள்...


சற்று நேரம் சரிகிறது..

அண்டை வீட்டிலிருந்தொரு
அனுதாப மரணச்செய்தி அழைக்கிறது..

உடல் தளர்வு கூட்டி
இமை சோகம் காட்டி
நெஞ்சம் விம்பி கண்ணீர் தெளிக்கும் நீங்கள்..,
நிச்சயம் அது நீங்கள் அல்ல...

உங்கள் நெடுந்தொடர் பாத்திரம்....!