Sunday, 10 November 2013

வென்றவனுக்கும்,
தோற்றவனுக்கும்,
வீர வரலாற்றுக் கல்வெட்டு..!

களத்தில் இறங்கி 
கத்தியெடுத்து வீசியவர்களுக்கு,
ஒரு கரித்துண்டு கிறுக்கல் கூட இல்லை…!
அவநம்பிக்கையை அடித்தளமிட்டு,
ஆகப்பெரும் வேகத்தோடு
எழுப்பிக்கொண்டிருக்கிறாய்..!
உன் சுவர்களை..

சுற்றுச்சுவர் எழுப்பிக்கொள்வதன் மூலம்,
சுதந்திரமடைந்து விடுவதாக
எண்ணிக்கொள்கிறாய்..

நிர்மாணிக்கப்பட்ட சுவர்களால்,
நிச்சயிக்கப்படும் வெற்றிடத்தை,
நீ அறியாதிருக்கிறாய்..
அல்லது,
அறிந்ததும் அலட்சியமாயிருக்கிறாய்..

எதிரானவர்களுக்கு
எதிர்வினையாற்றாது,
சுவர் மூடிக்கொள்வதன் மூலம்,
எதிர்வினையை
உன்மீதே திருப்பிக்கொள்கிறாய்..

அடைக்கப்பட்ட சுவர்களின் மீது,
அமைக்கப்பட்ட தற்செயல் சாரளங்களை
பிறழ்மனத்தின் கைகொண்டு
கதவடைத்துவிடுகிறாய்…

நாற்புறமும்
கட்டிமுடிக்கப்பெற்ற
உனக்கான சுவர்களால்,
உலகத்தை துண்டித்துவிட்டதாக
பெருமகிழ்வு கொள்கிறாய்..

உன்னைத் துண்டித்துவிட்ட
எந்தச்சலனமும் அன்றி
இயல்பாகவே இயங்குகிறது
எல்லோருக்குமான உலகம்….!

களவாடப்படும் முன்
கடைசி ஆசை எதுவென்று
அரசலாற்று மணலிடம்
அரை மனதோடு கேட்கப்பட்டது..

இறுதியாய் ஒருமுறை
தாவணிப்பெண்கள்
தன்மீது பாண்டியாட வேண்டுமென
தண்ணீர் மல்க கேட்டது மணல்..

தாவணிப்பெண்கள்
வேற்றுடைக்கு மாறி
சடுகுடு விளையாட
துாரதேசம் போயிருப்பதாய்ச் சொல்லி,

கடைசி ஆசை
கண்ணியமாக மறுக்கப்பட்டு
மரணமளிக்கப்பட்டது மணலுக்கு..

ஆறும்,
கடற்கரையுமற்ற
அனாதை நகரமொன்றில்,

வீடுகட்டுவதற்கென
வீதியில் கொட்டப்பட்ட மணற்குவியலில்,
தெருவோரச் சிறுமிகள்
வீடுகட்டி விளையாடி
குதித்து சறுக்கி மகிழ்ந்ததும்

மீண்டு, உயிர்த்தெழுந்து,
மீண்டும் கண்மூடியது அம்மணல்..





யுத்தக் களத்திலிருந்து
வருகிறேன்..

அங்கே
ஒரு இணைப்பறவை இறந்து கிடந்தது..
இன்னொரு பறவை
இரைதேடிக் கொண்டிருந்தது..

இரு கைகளற்ற
உடலொன்றின்
இருகால்கள்
நீர் தேடி நகர்ந்து கொண்டிருந்தது..

உடைகள் அவசியமற்ற
நிர்வாண உடல்கள்
தரைபரப்பி
கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது..

வேரில் அமிலமூற்றப்பட்ட
மரமொன்று
இலைகளோடு சேர்த்து
கிளைகளையும் உதிர்த்து
கீழ்விழக் காத்திருந்தது…

உறுப்புகள் வீசியெறியப்பட்ட
ஆழ்கிணற்றிலிருந்து
மெல்ல மெல்ல
உயர்ந்தெழுந்தது குருதி ஊற்று..


நான்
யுத்தக் களத்திலிருந்து வருகிறேன்..

எதை எதை இழந்தேன் என்று
எண்ணிப்பார்க்க நேரமில்லை…

கருப்பையினுள் ஓர் உயிரோடு
வாயிலில் கிடத்தியிருக்கிறேன்
என் மனைவியை..

வயிற்றுக்கு உணவிடுங்கள்..

என்றேனும் யாம் போரிட வேண்டுமெனில்
எங்கள் வயிற்றுக்கு
இன்றேனும் நீங்கள் சோறிடவேண்டும்..!.
கடந்து போகிறவர்களெல்லாம்
கன்னத்தில் போட்டு நகர்ந்தபோதும்,

பன்னீர் தெளித்து பாலாபிஷேகம் 
நிகழ்த்திய போதும்,

அகல்விளக்கு திரி உயர்ந்து
புறவெளிச்சம் பரவியபோதும்,

அலங்கரித்து மாலையிட்டபோதும்,
ஆதியோடந்தமாய் தீபம் காட்டியபோதும்,

பெருவொலி எழுப்பி தேங்காயுடைத்த போதும்,
சிறுமணியடித்து சரணம் போற்றிய போதும்,

அசைவற்று மௌனம் காத்த
தெருவோரத்து அம்மன்..

நெடுஞ்சாலை அதிகாரிகள் புடைசூழ
வலிய எந்திரத்தோடு உடைத்து
ஆக்கிரமிப்பு என அகற்றியபோதும்
அசைவற்று அதே மௌனம்
காத்துக்கொண்டிருக்கிறாள்…

Saturday, 9 November 2013






மூன்றாம் தலைமுறையில்
கோசலையாயிருந்து,
தலைநரை எட்டியிருக்கும்
தந்தையின் காலத்தில்
கோசலையம்மாளாக இருந்தவள்..
எங்களுக்கு
கோசலைப் பாட்டியாயிருக்கிறாள்..

இறுதி வரையிலும்,
புகைப்படம் எதற்க்கும்
முகம் காட்டியதில்லை அவள்..

அபூர்வமாய்
அக்காவின் திருமணத்தில்
மெத்தப்பயந்து, முகம் வெளிறி,
சுவர் வெறித்து நின்ற

கோசலையப்பாட்டியை,

தோள் வரையில் சதுரமாய் வெட்டி,
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கூட்டி,
கண்களில் கசியும் நீர்
காட்சி பிம்பத்தை அசைக்க,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்கு
காணிக்கை கொடுத்திருக்கிறேன்…

சாயுங்காலத்திற்கெல்லாம்
தன் முகம் ஊர் முழுக்க பிரபல்யமாகும்
எனத்தெரிந்தால்,

கோசலைப்பாட்டி
முகத்தை துாக்கி வைத்துக்கொண்டு,
குறைந்தது மூன்று நாளைக்காவது
பட்டினியோடு பேசாமல்
படுக்கையில் கிடப்பாள்..!





ஆசீர்வதிக்கப்படாத
இரவின் உறக்கத்தை,
பலநாள் இந்த வீதியில்
காலடித்தடங்களாக பதிந்திருக்கிறேன்..

நிரந்தரப் பிரிவென்று அறியாத யாருடனோ
விடைபெறுதலுக்குப்பின்,
இந்த வீதியின் எல்லையை
நெடுநேரம் ஏக்கங்களால்
நிறைத்திருக்கிறேன்..

துயருற்று தலைகவிழ்ந்ததொரு
வன் பொழுதில்,
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளால்
இந்த வீதியை மூழ்கடித்திருக்கிறேன்..

அண்டை விட்டிலிருந்து
புறப்பட்ட சவ ஊர்வலத்தில்,
மிச்சமாயிருந்த சொற்களையெல்லாம்,
இறந்துபட்ட பூக்களின் ஊடே வீசியெறிந்து
இவ்வீதியை
அசுத்தமாக்கியிருக்கிறேன்…

அரவமற்று கடந்து போன
மற்றும் பலரை,
அலைகழித்த சிரிப்பொலியால்
மனம் கிழித்து,
இவ்வீதியெங்கும்
திரையிட்டிருக்கிறேன்..

இப்போதும் கூட..

தனிமை தள்ளிவிட்டுப் போன
ஒரு பெரும் பள்ளத்தில்,
நினைவுச்சருகுகளை நிரப்பி
சமதளமாக்கிக் கொண்டிருக்கிறேன்
இவ்வீதியை…!